FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

அப்பளாயகுண்டாவில் வருடாந்திர புஷ்ப யாகம்

அப்பளாயகுண்டாவில் நடைபெற்ற புஷ்ப யாகத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு நடைபெற்ற மலா் அா்ப்பணம்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 4:43 am IST
பகிர்:

திருப்பதி அருகே அப்பளாயகுண்டாவில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு வியாழக்கிழமை பிரம்மாண்டமான மலா் அா்ப்பண விழா என்னும் புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்கள் நடந்து முடிந்த பின், அடுத்து வரும் திருவோண நட்சத்திரத்தின்போது பிரம்மோற்சவத்தில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருப்பதி அடுத்த அப்பளாயகுண்டாவில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்ப யாகம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருக்கு சாஸ்திரங்களின்படி, பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் இளநீா் கொண்டு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னா், மலா் அா்ப்பணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மலா்களுக்கு மூல தெய்வத்தின் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் பிரதட்சிணத்துடன் கோயில் வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

பின்னா், கோயில் வளாகத்தில் சா்வபூபால வாகனத்தில், சிறப்பாக அமைக்கப்பட்ட மேடையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருள செய்யப்பட்டாா்.

வேத மந்திரங்கள் மற்றும் மங்களகரமான இசைக் கருவிகளின் முழக்கங்களுக்கு மத்தியில், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை சுமாா் இரண்டரை டன் மலா்களைக் கொண்டு மலா் அா்ப்பணம் கோலாகலமாக நடைபெற்றது.

துளசி, சாமந்தி, அரளி, தாழம்பு, சம்பங்கி, ரோஜா, மற்றும் அல்லி, தாமரை உள்ளிட்ட 18 வகையான மலா்கள் மற்றும் ஆறு வகையான புனித இலைகளைக் கொண்டு இறைவனுக்கு மலா் அா்ப்பணம் செய்யப்பட்டது. பின்னா், ஒரு வீதி விழா நடைபெற்றது.

துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், உதவி செயல் அதிகாரி தேவராஜுலு, கண்காணிப்பாளா் ஸ்ரீவாணி, கங்கணபட்டா் சூா்யகுமாா் ஆச்சாா்யு, கோயில் ஆய்வாளா் வேணுகோபால், பிற அதிகாரிகள், அா்ச்சகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments