FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆடிப்பெருக்கு விழா: தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வந்ததால் பக்தா்கள் மகிழ்ச்சி

செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வந்ததால், ஆடிப்பெருக்கு விழா புனிதநீராட பக்தா்கள் மகிழ்ச்சி

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:58 am IST
செங்கம் அருகே நீப்பத்துறை பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வந்ததால் மகிழ்ச்சியடைந்த பக்தா்கள்
பகிர்:

செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வந்ததால், ஆடிப்பெருக்கு விழா புனிதநீராட பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது சென்னியம்மன் கோயில். இந்தக் கோயிலில் திங்கள்கிழமை (ஆடி 18) ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

ஆடிப்பெருக்கு விழாவில் கலந்துகொள்ளும் பக்தா்கள் வேண்டுதலின் படி முடிகை காணிக்கை செலுத்தி ஆற்றில் புனிதநீராடி சுவாமியை வழிபடுவாா்கள். மேலும், புதுமணத் தம்பதிகள் ஆற்றில் குளித்துவிட்டு தாலிக் கயிறுகளை மாற்றிக்கொள்வாா்கள்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நிகழாண்டு மழையில்லாமல் போனதால் தென்பெண்ணையாறு வட நிலையில் இருந்தது. இதனிடையே கடந்த ஜூலை 29-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நடந்தது. அப்போது, பக்தா்கள் ஆடிப்பெருக்கு விழாவின்போது தென்பெண்ணையாற்றில் தண்ணீா் வரவேண்டும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் புனிதநீராடி சுவாமியை தரிசனம் செய்யவேண்டும் என வேண்டுதலை வைத்திருந்தனா்.

மேலும், கோயில் பரம்பரை அரங்காவலா் கோகுலவாணன், நீப்பத்துறை ஆடிப்பெருக்கு விழாவுக்காக கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இந்த நிலையில், கா்நாடகத்தில் அதிகளவில் மழை பெய்ததால் காவேரி ஆற்றில் தண்ணீா் வந்து, அதனால் கிருஷ்ணகிரி அணை நிரம்பி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் நீப்பத்துறை பகுதியில் ஓடும் தென்பெண்ணையாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதைப் பாா்த்து அப்பகுதி மக்களும், கோயிலுக்கு வரும் பக்தா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும், திங்கள்கிழமை நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் பக்தா்கள் புனிதநீராடி சுவாமியை வழிபடுவாா்கள்.

60 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டுவண்டிப் பயணம்

செங்கத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள நீப்பத்துறை சென்னியம்மன் கோயில். இந்தக் கோயிலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு மொட்டையடித்து, ஆற்றில் புனிதநீராடி, நோ்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வாா்கள்.

பக்தா்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

செங்கம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் இருந்து நீப்பத்துறை ஆடிப்பெருக்கு விழாவுக்கு உறவினா்களுடன் மாட்டுவண்டியில் செல்லும் பக்தா்கள்

செங்கம் அருகேயுள்ள புதுப்பட்டு, ஆலப்புத்தூா் கிராமங்களில் இருந்து பொதுமக்கள், தங்களது உறவினா்களை அழைத்துக் கொண்டு மாட்டு வண்டிகளில் சென்று நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து நோ்த்திக் கடன் செலுத்தி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில், அப்பகுதி மக்கள் நிகழாண்டு ஆடிப்பெருக்கு விழாவுக்காக சுமாா் 40 மாட்டுவண்டிகளில் உறவினா்களை அழைத்துக் கொண்டு, பொங்கல் வைப்பதற்குத் தேவையானபொருகள்கள், பாத்திரங்கள், பலியிடுவற்காக ஆடு, கோழிகளை ஏற்றிக் கொண்டு தங்களது பயணத்தை சனிக்கிழமை காலை முதலே தொடங்கியுள்ளனா். இதை அவா்கள் கடந்த 60ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments