FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தி: வேலூர் மாவட்டத்தில் 1,556 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் 1,556 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் 1,556 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. 
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1,556 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த சிலைகள் சுமார் 5 அடி முதல் 12 அடி வரையிலும் வைக்கப்பட்டிருந்தன. 
வேலூரில் அண்ணாசாலை, சைதாபேட்டை, தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி, சேண்பாக்கம், தொரப்பாடி, அரியூர், காட்பாடி, காந்திநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. 
இதில், சைதாபேட்டை தோபாசாமி தெருவில் வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ எடைகொண்ட லட்சுமி, சரஸ்வதியுடன் கூடிய விநாயகர் சிலை, அரசமரப்பேட்டையில் மாட்டுவண்டியில் சிவனுடன் செல்லும் விநாயகர்,  சார்பனாமேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்க விநாயகர் சிலை, பில்டர்பெட் சாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த கருடவாகன விநாயகர் சிலை ஆகியவை பக்தர்களை கவர்ந்தன. மேலும், அனைத்து கோயில்களிலும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும், கம்பு, சோளம், சுண்டல், கொழுக்கட்டை படையலிட்டும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 
விநாயகர் சதுர்த்தியையொட்டி பழங்கள், பூக்கள், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றன. பூஜை பொருள்கள் வாங்க மார்க்கெட் பகுதியில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. 
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டம் முழுவதும் சதுப்பேரி ஏரி, ஊசூர் ஏரி, கருகம்புத்தூர் ஏரி, ராணிப்பேட்டையில் தண்டலம் ஏரி, சோளிங்கர் பெரிய ஏரி,  புளியந்தாங்கல் ஏரி, ஆற்காட்டில் ஆற்காடு ஏரி, வேப்பூர் ஏரி, அரக்கோணத்தில்  மங்கம்மாபேட்டை ஏரி, மாவேறு ஏரி, குடியாத்தத்தில் நெல்லூர்பேட்டை ஏரி, ஆம்பூரில் பாலாறு, சான்றோர் குப்பம் ஏரி, வாணியம்பாடியில், பள்ளிப்பட்டு ஏரி, திருப்பத்தூரில் பொன்னேரி ஏரி, ஏலகிரி ஏரி என 16  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிகளில் விநாயகர் சிலை விசர்ஜனம் சனிக்கிழமை முதல் நடைபெற உள்ளன.
இந்த விசர்ஜன ஊர்வலத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க மாவட்டம் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் உட்கோட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட அரக்கோணம், நெமிலி வட்டங்கள் மற்றும் சோளிங்கர் நகரம், சுற்றுவட்டார கிராமங்களில் மொத்தம் 249 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அரக்கோணம் நகரில் தர்மராஜா கோயில் மைதானத்தில் அப்பகுதி இளைஞர்கள் சார்பில் ஆஞ்சநேயர் சுமந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
அரக்கோணம் உட்கோட்ட காவல் எல்லையில் அந்தந்த காவல் நிலையங்கள் வாரியாக அரக்கோணம் நகரம்-75, கிராமியம்- 48, தக்கோலம்-15, நெமிலி-14, சோளிங்கர்-28, காவேரிபாக்கம்-26, கொண்டபாளையம்-13, பாணாவரம்-21, அவளூர்-9 என மொத்தம் 249 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இவற்றில், இந்து முன்னணியினர் சார்பில் அரக்கோணம் நகரம்-14, கிராமியம்-16, காவேரிபாக்கம்-11, சோளிங்கர்-1 என 42 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
இச்சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த பகுதிகளில் வருவாய்த் துறையினரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள 249 இடங்களிலும் அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் போலீஸார், ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள  செங்குந்த மரபினர்களின் வலம்புரி சக்தி விநாயகர் கோயில் சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 500 கிலோ எடையுள்ள லட்டுகளால் செய்யப்பட்ட விநாயகர் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி கோயிலில் உள்ள மூலவருக்கு காலை சந்தனகாப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து அங்குள்ள பொன்னியம்மன் கோயில் அருகிலிருந்து மேளதாளம் முழங்க 500 கிலோ லட்டு விநாயகர் ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். 
நெல்லூர்பேட்டையில் 451 கிலோ லட்டு விநாயகர்: குடியாத்தம் நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பில் உள்ள ஜோதி விநாயகர் கோயில் சார்பில், 451 கிலோ எடையுள்ள லட்டால் செய்யப்பட்ட விநாயகர் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் மூலவருக்கு மலர் அலங்காரம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாசுபடா அம்மன் கோயில் அருகிலிருந்து லட்டு விநாயகர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை புதுத்தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு  பூஜைகள் செய்யப்பட்டது.
அதேபோல் திருவலம் பேரூராட்சிக்கு உள்பட்ட சிவானந்தா நகர் குடியிருப்புப் பகுதி இளைஞர்கள் சார்பில் அங்குள்ள சக்தி விநாயகர் கோயில் முன் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ராணிப்பேட்டை பெல் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் மந்தாகினி மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.
தன்வந்திரி பீடத்தில்...
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் விநாயக சதுர்த்தியையொட்டி, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில் காலை10.30 மணியளவில் கண் திருஷ்டி கணபதி யாகம், விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன வியாழக்கிழமை நடைபெற்றன. 
மேலும், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சஹஸ்ர நாமாவலி அர்ச்சனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கொண்டாடப்பட்டது. 
வாணியம்பாடி இந்து முன்னணி சார்பில் அம்பூர்பேட்டையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் வளாகத்தில் 12 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் விட்டல், கிரி, பாஜக மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் க.சிவப்பிரகாசம், கார்த்திக், சுரேந்தர் மற்றும் விழாக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
ஆலங்காயம், நாட்டறம்ள்ளி, உதயேந்திரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.
ஆம்பூரில்... 
ஆம்பூர் நகரில் 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு  சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும், விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments