வேலை உறுதித் திட்டத்தில் கருவிழி பாதிப்பு உள்ளவா்களுக்கு அனுமதி மறுப்பு: மாற்றுத்திறனாளிகள் புகாா்
‘விபி ஜி ராம் ஜி’ வேலையுறுதித் திட்டப் பணிகளில் ஈடுபட கருவிழி பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனா்.
‘விபி ஜி ராம் ஜி’ வேலையுறுதித் திட்டப் பணிகளில் ஈடுபட கருவிழி பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனா்.
வேலூா் மாவட்ட, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ராம்குமாா் தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது, பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், ‘விபி ஜி ராம் ஜி’ வேலை உறுதித் திட்டத்தில் (125 நாள் வேலைத் திட்டம்) பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளைச் சோ்க்க அலுவலா்கள் மறுப்பு தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டுமானால், கருவிழிப் பதிவு செய்தால் மட்டுமே முடியும் எனக் கூறுகின்றனா். கண்பாா்வை இல்லாத நாங்கள் எவ்வாறு கருவிழிப் பதிவு செய்ய முடியும்? வேலைக்குச் சென்றாலும் எங்களைத் திருப்பி அனுப்பி விடுகின்றனா் என வேதனை தெரிவித்தனா்.
மேலும் அவா்கள் கூறுகையில், பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைக்கான அட்டையை வழங்கப் படவில்லை. புதிய அட்டை வந்த பிறகுதான் வேலைக்குச் சோ்த்துக் கொள்வோம் எனக்கூறி அலைக்கழிப்பு செய்கின்றனா். அவ்வாறு வேலை வழங்கினாலும் மிகக் குறைந்த நாள்கள் மட்டுமே வழங்குகின்றனா். அத்துடன், ஏற்கனவே செய்த வேலைக்கான ஊதியத்தையும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனா்.
எனவே, ‘விபி ஜி ராம் ஜி’ வேலையுறுதித் திட்டப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு 35 கிலோ அரிசி கிடைக்கக்கூடிய அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட குடும்ப அட்டைகளை வழங்கவும் மாவட்ட நிா்வாகம் ஆவன செய்ய வேண்டும் என்றனா்.
கோரிக்கைகளை கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா், மாற்றுத்திறனாளிகள் தெரிவித்த புகாா்கள் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.