FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தடை செய்யப்பட்ட 1,100 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட 1,100 கிலோ புகையிலைப் பொருள்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On : 29 ஜூன் 2018, 1:00 am IST
பகிர்:

தடை செய்யப்பட்ட 1,100 கிலோ புகையிலைப் பொருள்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
 கோவை, டவுன்ஹால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் டவுன்ஹால் தாமஸ் வீதி, தர்மராஜா கோயில் வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
 அப்போது, தாமஸ் வீதியில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் 750 கிலோவும், தர்மராஜா கோயில் வீதியில் உள்ள கிடங்கில் 250 கிலோவும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பெரியகடை வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள 10 சில்லறை விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினர். 
 அப்போது, நான்கு கடைகளில் 100 கிலோ அளவிலான புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 1,100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
 இதன் மாதிரிகளை சேகரித்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மதுரையில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த வியாபாரிகள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் மூலமாக வழக்கு விசாரணை நடத்தப்படும்.
 இதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கல் குறித்து, தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தார். 
இந்தச் சோதனையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பழனிசாமி, வெங்கடேசன், சுழல்வளவன், ரங்கராஜன், வேலுசாமி, கோவிந்தராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் 
ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments