இன்று விநாயகர் சதுர்த்தி: கடை வீதியில் குவிந்த மக்கள்
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை (செப்டம்பர் 13) கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவுக்குத் தேவையான
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை (செப்டம்பர் 13) கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் புதன்கிழமை குவிந்திருந்தனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கோவை மாநகரில் பல்வேறு ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் 393 பெரிய அளவிலான சிலைகள் வழிபாட்டுக்கு நிறுவப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்டம் முழுவதிலும் சுமார் 1,400 சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர கோவை புலியகுளம், ஈச்சனாரி, ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது. மேலும், பொதுமக்களும் தங்களது வீடுகளில் களி மண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபாடு நடத்த உள்ளனர்.
இதையடுத்து விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான பொருள்களை வாங்குவதற்காக ராஜ வீதி, டவுன்ஹால், பெரிய கடை வீதி, பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், கணபதி, ராமநாதபுரம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகளில் ஏராளமான பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனர்.
பூஜைக்குத் தேவையான களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள், விநாயகர் சிலைகளை அலங்காரம் செய்வதற்கான குடைகள், மலர்கள், பழங்கள், சுண்டல், அரிசி மாவு, வெல்லம், பொரி, பூசணி, வாழை இலை உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், பொருள்களின் விலை வழக்கத்தைக் காட்டிலும் சற்று உயர்ந்திருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.