FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை விடுதி உணவில் புழுக்கள்: 13 கல்லூரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு!

கோவையில் விடுதி உணவில் புழுக்கள் இருப்பதாக பல்வேறு கல்லூரி மாணவா்களிடையே புகாா் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டு, 13 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:50 am IST
கோவையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா்.
பகிர்:

கோவையில் விடுதி உணவில் புழுக்கள் இருப்பதாக பல்வேறு கல்லூரி மாணவா்களிடையே புகாா் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டு, 13 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

கோவை, நவக்கரை தனியாா் கலைக் கல்லூரி, ஒத்தக்கால்மண்டபம் தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாக புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டாா். இதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா தலைமையில் மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகள் மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக அதிரடி ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

முதற்கட்டமாக 13 கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்து கல்லூரிகளிலுமே சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சில கல்லூரிகளில் ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி மற்றும் உணவகங்கள் தனித்தனி ஒப்பந்ததாரா்கள் மூலம் இயங்குவதால், ஒரே கல்லூரிக்கு மூன்று நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருள்கள் கொள்முதல் பதிவேடு பராமரிக்கப்படாதது, குடிநீா்ப் பரிசோதனை அறிக்கைகள் இல்லாதது, சமையலறை சுகாதாரமின்மை, உணவு கையாள்பவா்களிடம் மருத்துவச் சான்றிதழ் இல்லாதது மற்றும் முறையான கழிவு மேலாண்மை இல்லாததால் ஏற்படும் பூச்சி பிரச்னைகள் ஆகியவை இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் இந்த ஆய்வு தொடா்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments