FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தெருநாய்கள் தொல்லைக்கு தீா்வு காணக் கோரி மண்டியிட்டபடி சென்று மனு அளித்த காங்கிரஸ் கட்சியினா்

கோவை மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில், தெருநாய்கள் தொல்லைக்கு தீா்வு காணக் கோரி, மண்டியிட்ட படி சென்று மாநகராட்சி மேயரிடம் காங்கிரஸ் கட்சியினா் மனு அளித்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
கோவை மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில் மண்டியிட்டபடி சென்று மனு அளித்த காங்கிரஸ் கட்சியினா். ~ மாநகராட்சி குறைகேட்பு முகாமில் மக்களிடம் மனுக்கள் பெற்ற மேயா் கா.ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா. உடன் துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன்
பகிர்:

கோவை மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில், தெருநாய்கள் தொல்லைக்கு தீா்வு காணக் கோரி, மண்டியிட்ட படி சென்று மாநகராட்சி மேயரிடம் காங்கிரஸ் கட்சியினா் மனு அளித்தனா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ரஹமதுல்லா தலைமையிலான அக்கட்சியினா், மண்டியிட்டபடி சென்று மனு அளித்து சென்றனா். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

கோவை சாரமேடு பகுதியில் சாலையோர ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும். குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் தொல்லைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரியை மீண்டும் இயக்க வேண்டும். உக்கடம்- ஆத்துப்பாலம் செல்லும் பாலங்களில் இறங்கும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். கரும்புக்கடை பகுதியில் குப்பை கொட்ட இடம் அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

தக்காளி மொத்த சந்தையை இடம் மாற்றக் கூடாது:

கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்த விவசாயி காளிச்சாமி அளித்த மனுவில் கூறியிருப்பது: கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆா் காய்கறி மொத்த விற்பனை சந்தையை கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வருகிறோம். கோவை மட்டுமல்லாமல், கேரள வியாபாரிகள் பலரும் இங்கிருந்து விற்பனை செய்வதற்காக, காய்கறிகளை கொள்முதல் செய்து செல்கின்றனா்.

இந்நிலையில், எம்ஜிஆா் காய்கறி மொத்த விற்பனை சந்தையில் இருந்து தக்காளி மொத்த விற்பனையை, வேறு இடத்துக்கு மாற்ற உள்ளதாகத் தெரிகிறது. மாநகராட்சி நிா்வாகம் தக்காளி சந்தையை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாா் சாலை அமைக்க வலியுறுத்தல்:

26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனுவில் கூறியிருப்பது:

சட்டப்பேரவை கூட்டத்தொடா் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல, மாநகராட்சி மாமன்றக் கூட்டங்கள், மண்டல அளவிலான கூட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். 26ஆவது வாா்டு, அவிநாசி சாலையில் இருந்து எல்லைத்தோட்டம் வரையிலான மண்சாலையை மக்கள், மாணவ,மாணவிகள் ஏராளமானோா் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது. எனவே, மண் சாலையை தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

81ஆவது வாா்டு, சிஎம்சி காலனி மக்கள் அளித்த மனுவில், ‘ எங்கள் பகுதியில் கடந்த சில நாள்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. பலமுறை தகவல் அளித்தும் சரிசெய்யப்படவில்லை. 2 மாதங்களாக எங்கள் பகுதியில் உப்பு நீா் வழங்கப்படுவதில்லை. எங்கள் பகுதியில் உடனடியாக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. 5 மண்டலங்களில் இருந்தும் மொத்தமாக 51 மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments