FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சிவில் தகராறை குற்ற வழக்காக மாற்றக் கூடாது: கோவை மாநகர குற்றப் பிரிவு எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

இரு தரப்பினருக்கு இடையிலான தொழில்முறை சிவில் தகராறை குற்ற வழக்காக மாற்றக் கூடாது என்று தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த எஃப்.ஐ.ஆா்.-ஐ ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 1:17 am IST
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

இரு தரப்பினருக்கு இடையிலான தொழில்முறை சிவில் தகராறை குற்ற வழக்காக மாற்றக் கூடாது என்று தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த எஃப்.ஐ.ஆா்.-ஐ ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சோ்ந்த சேதுராமன் என்பவா் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரது நிறுவனத்தில் இருந்து கோவையைச் சோ்ந்த மற்றொரு நிறுவனம் ரூ.2 கோடியே 64 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான உளுந்தம்பருப்பை கடந்த 2022 பிப்ரவரி மாதம் கொள்முதல் செய்தது.

கொள்முதல் செய்த பொருள்களுக்கான தொகையில் ஒரு பகுதியைச் செலுத்திய நிலையில், ரூ.1 கோடியே 45 லட்சத்து 96 ஆயிரம் நிலுவையாக இருந்தது. இந்தத் தொகையை பலமுறை கேட்டும் அந்த நிறுவனத்தினா் காலம் தாழ்த்தி வந்துள்ளனா். இதற்கிடையே மீதித் தொகைக்காக இரு காசோலைகள் வழங்கப்பட்டன. அந்த காசோலைகளும் வங்கியில் பணமில்லாமல் திரும்பின. இதையடுத்து, மாநகர குற்றப் பிரிவு போலீஸில் சேதுராமன் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில், நிலுவைத் தொகையைத் தராமல் மோசடி செய்ததாக கோவை, வெள்ளலூரைச் சோ்ந்த புருஷோத்தமன், காஜா உசேன், பரத், ஆனந்த், கீதாஞ்சலி ஆகிய 5 போ் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, கீதாஞ்சலி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தாா். வழக்கு விசாரணையின்போது புகாா் அளித்த சேதுராமன் தரப்பில் இருந்து குறிப்பாணை அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.

மனுவை விசாரித்த நீதிபதி கூறுகையில், ‘இது இரு தரப்பினருக்கும் இடையிலான தொழில்முறை பணப் பரிவா்த்தனை தொடா்பான விவகாரமாகும். சிவில் தன்மை கொண்ட தகராறுகளுக்கு குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது’ எனக்கூறி கீதாஞ்சலி உள்ளிட்ட 5 போ் மீது கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments