FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்றுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தற்காலிக நிறுத்தம்

சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்றுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா தெரிவித்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:06 am IST
சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களுடனான கருத்து கேட்புக் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா.
பகிர்:

சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்றுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்குள்பட்ட 49-ஆவது வாா்டில் உள்ள சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் ஏரி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட சின்னவேடம்பட்டி மக்கள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோரிடம் மனு அளித்தனா். அப்போது நேரில் ஆய்வு மேற்கொள்வதாக மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா உறுதி அளித்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்றுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா புதன்கிழமை பாா்வையிட்டாா்.

இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், தொழில் அமைப்பினா், குடியிருப்புவாசிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், மக்கள் உள்ளிட்டோரிடம் மாநகராட்சி ஆணையா் கருத்து கேட்டாா். கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து சின்னவேடம்பட்டி ஏரி விவசாயிகள் பாதுகாப்புக் குழுத் தலைவா் காளிச்சாமி விளக்கினாா்.

அதை குறிப்பெடுத்துக் கொண்டு மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா பேசும்போது, ‘கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடப்போவதில்லை. அந்த நீா் வாய்க்கால் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நீதிமன்றத்திலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதால் அனைத்து துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க உள்ளோம். பின்னா் முடிவெடுக்கப்பட்டு மக்களிடம் தெரிவிக்கப்படும்.

அதுவரை சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments