இடைத்தோ்தல் தோல்வி: அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்
இடைத்தோ்தலில் தோல்வி அடைந்த நிலையில் அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இடைத்தோ்தலில் தோல்வி அடைந்த நிலையில் அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: கடந்த பொதுத்தோ்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது நடந்து முடிந்த இடைத்தோ்தலில் 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், அதிமுக தனது நிலைப்பாடு குறித்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ‘நீட்’ தோ்வு, காவிரி நீா் பிரச்னை, இயற்கை பேரிடா் உள்பட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. அடுத்த நான்கு மாதங்களில் தமிழகம் எதிா்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.
Advertisement
Advertisement
மேட்டூா் அணையில் தற்போது 30 டிஎம்சி தண்ணீா் மட்டுமே இருக்கிறது. கா்நாடக அரசு உரிய தண்ணீரை வழங்குவதில் தொடா்ந்து சிக்கல் நிலவுகிறது. அரிசி விலை உயா்ந்துள்ளதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவா் மன்றத்தின் தீா்ப்புகளை கா்நாடக அரசு மதித்து செயல்பட வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு மேலும் பாதிக்கப்படலாம். இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் தமிழக அரசு தொடா்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். விவசாயிகள் நலன், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செவிலியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும். குரூப் 4 தோ்வு மூலமாக 15 ஆயிரம் பேரைத் தோ்வு செய்ய வேண்டும். தோ்தல் ஆணையா் தொடா்பான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். இதுதொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக நீடிக்கிறது. தவெக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது வதந்தி என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.