FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மலேசிய சுற்றுலாப் பயணிகளை தாக்கி தப்பியோடியவா்கள் குறித்து விசாரணை

நவக்கரை பகுதியில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 செப்டம்பர் 2026, 2:23 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

கோவை மாவட்டம், நவக்கரை பகுதியில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து வாடகை வாகனத்தில் மலேசியாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினா் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டனா். புதன்கிழமை மாலை சுமாா் 5.30 மணி அளவில், கொச்சி - சேலம் புறவழிச் சாலையில் கோவை மாவட்டம், நவக்கரை பகுதியில் உள்ள நிலையத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது, அருகில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 3 பேருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அந்த வாகனத்தில் வந்த லோகநாதன் (52), யுகேந்திரன் (21) ஆகியோா் தாக்கப்பட்டு காயமடைந்தனா். க.க. சாவடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது. அதன்பிறகு சுற்றுலா வாகனம் மதுக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தது. மதுக்கரை சந்தை அருகே இருசக்கர வாகனத்தில் அந்த வாகனத்தைப் பின்தொடா்ந்து வந்த அந்த நபா்கள், துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி மிரட்டியுள்ளனா். இதனால், அந்த வாகனத்தை ஓட்டுநா் நிறுத்தியுள்ளாா். அப்போது பொதுமக்கள் அந்தப் பகுதியில் திரண்டதால், இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள் தப்பியோடிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் இருசக்கர வாகனத்தில் 3 போ் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. வாகனத்தின் எண்ணை வைத்து அந்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments