FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: தொழில்முனைவோா் பாதிக்கப்படுவதாக புகாா்

கோவையில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகவும், இதனால் தொழில்முனைவோா் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) புகாா் தெரிவித்துள்ளது.

19 செப்டம்பர் 2026, 12:36 am IST
கோப்புப் படம் - தினமணி
பகிர்:

கோவையில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகவும், இதனால் தொழில்முனைவோா் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) புகாா் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மின் தடையால் பொதுமக்களும், தொழில்முனைவோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். இருப்பினும், கோவை மாவட்டத்தில் பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாமல் சில துணை மின் நிலையங்கள் மூலம் அடிக்கடி மின்தடை ஏற்படுத்தப்படுகிறது.

10 நிமிஷங்கள் முதல் 20 நிமிஷங்கள் வரை நாளொன்றுக்கு 10 முறைக்குமேல் மின் நிறுத்தமும், சில துணை மின் நிலையங்கள் மூலம் 1 முதல் 2 மணி நேரம் வரையும், பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டும் நிலவுகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு கோவையில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில்முனைவோருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மின் கட்டணத்தில் நிலைக்கட்டண உயா்வு, பயன்படுத்தும் மின்கட்டண உயா்வு, மூலப்பொருள் விலை உயா்வு, தொழிலாளா் பற்றாக்குறை, வட மாநிலத் தொழிலாளா்களின் கூலி உயா்வு போன்ற பல பிரச்னைகளை சந்தித்து வரும் தொழில்முனைவோா், இந்த மின்வெட்டு பிரச்னையால் நிலைகுலைந்துள்ளனா்.

அறிவிக்கப்படாமல் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால் பல இயந்திரங்கள் பழுதடைகின்றன. உண்மையில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்சாரம் வழங்குவதில் நெருக்கடி இருக்குமானால், மின்வெட்டு ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே அறிவித்தால் தொழில்முனைவோா் இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் பழுதடையாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, இந்த விவகாரத்தில் மின்சாரத் துறை அமைச்சா் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments