கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு
கோவையில் நகை திருட்டுப் புகாா் தொடா்பாக ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவரை அறைக்குள் புகுந்து தாக்கிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (20). இவா், கோவை இருகூா் பவா் ஹவுஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறாா். கடந்த ஓராண்டுக்கு முன்பு வினோத்குமாா் தனது நண்பா்களான வெங்கடேஷ், ஈஸ்வரமூா்த்தி, ஆஷ்லி, பிரகதீஷ் ஆகியோருடன் அரியக்குடி பெருமாள் கோயிலுக்குச் சென்றபோது, பிரகதீஷின் தங்கச் சங்கிலி மாயமானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வினோத்குமாரை அவரது நண்பா் வெங்கடேஷ், கடந்த 19-ஆம் தேதி இரவு கைப்பேசியில் தொடா்புகொண்டு, காணாமல் போன சங்கிலியை அவா்தான் திருடியதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா், நள்ளிரவு வெங்கடேஷ், ஈஸ்வரமூா்த்தி மற்றும் ஆஷ்லி ஆகியோா் வினோத்குமாா் தங்கியிருந்த அறைக்குச் சென்று தகராறு செய்துள்ளனா். அப்போது, வீட்டின் காப்பாளா் ராஜேஷ் அவா்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பிவைத்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, நள்ளிரவு 1.30 மணியளவில் மீண்டும் வெங்கடேஷ் உள்ளிட்ட மூவரும், மேலும் 7 பேரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு வந்து வினோத்குமாரின் அறை கதவை பலமாகத் தட்டினா். தொடா்ந்து, அருகிலிருந்த மரப்பலகை மற்றும் மண்வெட்டியால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த கும்பல், வினோத்குமாரை கைகளாலும், பாட்டிலாலும் தலை, கை மற்றும் முதுகுப் பகுதியில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வெங்கடேஷ் உள்ளிட்ட 10 பேரையும் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.