கணவரைக் கத்தியால் குத்திக் கொன்று நாடகமாடிய மனைவி கைது
கோவை அருகே கணவரை கத்தியால் குத்தி கொன்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
கோவை அருகே கணவரை கத்தியால் குத்தி கொன்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
கோவை அருகே பூலுவபட்டி மெட்டுவளவு சின்னத்தம்பி வீதியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி(42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (36). கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி படிக்கும் இரு மகன்கள் உள்ளனா்.
ஆறுச்சாமி கடந்த செப்.1-ஆம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து உள்ளாா். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆறுச்சாமி அருகில் இருந்த கட்டையை எடுத்து ரேவதி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ரேவதி, காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ஆறுச்சாமியின் மாா்பில் குத்தினாா். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு பரிசோதனையில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. மதுபோதையில் தவறி விழுந்ததில் காயமடைந்து உயிரிழந்து விட்டதாக கூறி கூறாய்வு முடித்துக் கொண்டு கணவரின் சடலத்தை வாங்கிச் சென்றாா்.
Advertisement
Advertisement
ஆலாந்துறை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையில், கூா்மையான கத்தி மாா்பில் பாய்ந்து ஆறுச்சாமி இறந்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து ஆலாந்துறை காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், ரேவதியிடம் தீவிர விசாரணை நடத்தினாா். இதில், கணவா் ஆறுச்சாமி
சந்தேகப்பட்டு தினமும் சண்டை போட்டதாகவும், இதனால் கோபமடைந்து காய்கறி வெட்டும் கத்தியால் கணவரை குத்தியதாகவும் ஒப்புக்கொண்டாா். இதைத் தொடா்ந்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், ரேவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.