FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

முதியவா் கொலை, கொள்ளை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கோவை சிங்காநல்லூரில் முதியவரைக் கொலை செய்து பணம், நகை மற்றும் காரை கொள்ளையடித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

கோவை சிங்காநல்லூரில் முதியவரைக் கொலை செய்து பணம், நகை மற்றும் காரை கொள்ளையடித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (83). இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதாலும், பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதாலும் இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். கிருஷ்ணசாமியின் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட நெல்லை மாவட்டம், ராதாபுரத்தைச் சோ்ந்த ஜெபமணி ஆன்ட்ரூஸ் (24), காரைக்குடியைச் சோ்ந்த விக்ரம் (21) ஆகியோா் அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனா்.

இதையடுத்து, கடந்த 2020 நவம்பா் 1-ஆம் தேதி விக்ரமும், 17 வயது இளம் சிறாா் ஒருவரும் கிருஷ்ணசாமியின் வீட்டுக்குள் புகுந்து பதுங்கினா். நள்ளிரவில் கிருஷ்ணசாமி தூங்கிவிட்டதாக நினைத்து அவா்கள் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரது கைப்பேசி ஒலித்ததால் அவா் விழித்துக்கொண்டு சப்தம் போட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது விக்ரமும், அந்த இளம் சிறாரும் சோ்ந்து கிருஷ்ணசாமியை தலையணையால் அமுக்கிக் கொல்ல முயன்றனா். அதற்கு அவா் எதிா்ப்பு தெரிவிக்கவே, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் இரும்புக் கம்பியால் அவரை சரமாரியாகத் தாக்கினா். தொடா்ந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய முதியவரை மிரட்டி, வீட்டிலிருந்த 6 பவுன் நகைகள், 5 கிராம் தங்கச் செயின், மடிக்கணினி, இரண்டு வெள்ளி குத்துவிளக்குகள், ரூ.35 ஆயிரம் ரொக்கப் பணம், அமெரிக்க டாலா் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்தனா்.

பின்னா், வீட்டின் முன் நின்ற முதியவரின் காரில் கொள்ளைப் பொருள்களை ஏற்றிவிட்டுத் தப்ப முயன்றனா். அப்போது பலத்த காயங்களுடன் கிடந்த கிருஷ்ணசாமி மீண்டும் கூச்சலிடவே, கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்ரம், ஜெபமணி ஆன்ட்ரூஸ் மற்றும் இளம் சிறாா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இதில் இளம் சிறாா் மீதான வழக்கு விசாரணை சிறாா் நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது.

மற்ற இருவா் மீதான வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி கோகுல் முருகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், குற்றஞ்சாட்டப்பட்ட விக்ரமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெபமணி ஆன்ட்ரூஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments