FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அங்கன்வாடி மையங்களில் செப்டம்பர் 27 இல் எடை மேளா

ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு எடை மேளா அங்கன்வாடி மையங்களில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. 
 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், போஷன் அபியான் திட்டத்தின்கீழ், தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
 இதில், ஆட்சியர் கதிரவன் பேசியதாவது:
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செப்டம்பர் 27 ஆம் தேதி 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான எடை மேளா நடைபெறுகிறது. 
பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றன. 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள், பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு விழிப்புணர்வுக் கூட்டம், பேரணிகள் நடத்த வேண்டும். 
 பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகள் மூலம் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பெற்றோருக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு கிராம செயலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்கள், களப் பணியாளர்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
 வட்டார அளவில் ஊட்டச்சத்து குறித்த புகைப்படக் கண்காட்சி, பேரணிகள் நடத்தப்பட வேண்டும். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ஒவ்வொரு தாய்மாரும் தங்களின் குழந்தைகளின் உயரம், எடையைக் கண்காணித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்று ஊட்டச்சத்து அளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லா குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
 இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மு.பாலகணேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கு.மரகதம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மா, அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments