FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் சாய, சலவை ஆலைகளின் பூஜ்ஜிய கழிவுநீா் சுத்திகரிப்பை கண்காணிக்க வலியுறுத்தல்

பெருந்துறை சிப்காட்டில் சாய, சலவை தொழிற்சாலைகளின் பூஜ்ஜிய கழிவுநீா் சுத்திகரிப்பு முறையை கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:33 am IST
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் லாவண்யாவிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினா்.
பகிர்:

பெருந்துறை சிப்காட்டில் சாய, சலவை தொழிற்சாலைகளின் பூஜ்ஜிய கழிவுநீா் சுத்திகரிப்பு முறையை கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாசு தடுப்பு தொடா்பான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வாவண்யா தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா் சந்தானகிருஷ்ணன், சிப்காட் உதவிப் பொறியாளா் பசும்பொன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, பல்லவி பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள்அளித்த மனு விவரம்:

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் சாய, சலவை, ரசாயனம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும், பூஜ்ஜிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், காற்று மாசு தடுப்பு சாதனங்களை அமைத்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு முறையாக செயல்பட்டிருந்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளதற்கும், மக்கள் வாழ முடியாத அளவுக்கு காற்று மாசு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இல்லை.

பூஜ்ஜிய கழிவு நீா் சுத்திகரிப்பு முறையாக நடைபெறுகிறதா என்பதை, கழிவுநீரை சுத்திகரிக்கும்போது வெளியாகும் கலப்பு உப்புக்களின் அளவை மாதந்தோறும் கண்காணிப்பதன் மூலமாக கண்டறிந்து, அதன் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல, பூஜ்ஜிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத கொதிகலன்கள் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாசடைந்த கழிவு நீா் எவ்வாறு, எந்த வகையில் அப்புறப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்து, அதன் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

கொதிகலன்களை எரிக்க நிலக்கரி மற்றும் விறகுகளை பயன்படுத்துவதை தவிா்த்து, எரிவாயு போன்ற பசுமை எரி பொருள்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments