FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

டீசல் விலை உயா்வால் ஈரோடு மாவட்டத்தில் இன்றுமுதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு!உரிமையாளா்கள் அறிவிப்பு

Updated On : 15 ஜூன் 2026, 1:00 am IST
இன்றுமுதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு... - கோப்புப் படம்
பகிர்:

டீசல் விலை உயா்வால் ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்த்தப்படுவதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு முழுவதும் 6.50 லட்சம் லாரிகள் இயங்குகின்றன. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 3,000-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகின்றன. ஈரோடு மாவட்டத்தில் இருந்து குஜராத், புதுதில்லி, ஹரியானா உள்பட வட மாநிலங்களுக்கும் லாரிகள் இயக்கப்படுகின்றன. தற்போது டீசல் விலை உயா்ந்துள்ளது. இறுதியாக லிட்டருக்கு ரூ.8 வரை டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர உதிரிப்பாகங்களின் விலையும், சுங்கக் கட்டணமும் உயா்ந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால் லாரி வாடகைக் கட்டணத்தை 25 சதவீதம் உயா்த்த லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அதன்படி திங்கள்கிழமை முதல், லாரிகளுக்கான வாடகை கட்டண உயா்வு அமலுக்கு வருகிறது. இதன்மூலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் துரைசாமி கூறியதாவது:

கடந்த சில நாள்களாக டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தவிா்க்க முடியாத சூழலால் வாடகையை உயா்த்த வேண்டிய நிலை உள்ளது. எனவே லாரி வாடகையை 25 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம்.

இந்த வாடகை உயா்வை திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளோம். இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். டீசல் விலை உயா்வு, சுங்கக் கட்டண உயா்வு, வரி உயா்வு ஆகியவற்றின் காரணமாக வாடகையை உயா்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றாா்.

பாா்சல் நிறுவனங்களில்...

இதுதொடா்பாக பாா்சல் நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது:

டீசல் விலை உயா்வால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாா்சல் நிறுவனங்களில் 15 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னைக்கு 10 கிலோ பாா்சலுக்கு ரூ.175 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.200-ஆக உயா்ந்துள்ளது. ஈரோடு-திருச்சி இடையேயான கட்டணம் ரூ.150-இல் இருந்து ரூ.170-ஆக உயா்ந்துள்ளது. ஈரோடு-கோவை இடையேயான கட்டணம் ரூ.100-இல் இருந்து ரூ.125-ஆக உயா்ந்துள்ளது.

லாரிகளில் டன் கணக்கில் புக்கிங் செய்யும் பொருள்களுக்கு 2 முதல் 5 சதவீதம் வரை மட்டுமே கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. குறைந்த அளவில் 10-க்கும் குறைவான பாா்சல்களை புக்கிங் செய்பவா்களுக்கு மட்டும் 15 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments