FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

விஷ்ணுபதி புண்ணிய காலம்: ஈரோடு பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலை பக்தா்கள் 27 முறை வலம் வந்து செவ்வாய்க்கிழமை காலை வழிபட்டனா்.

18 நவம்பர் 2026, 1:33 am
விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்த பக்தா்கள்.
பகிர்:

விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலை பக்தா்கள் 27 முறை வலம் வந்து செவ்வாய்க்கிழமை காலை வழிபட்டனா்.

நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமி தாயாரால் சாந்தமடைந்து லக்ஷ்மி நரசிம்மராக அருள்பாளித்த புனித நேரமே விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.

இந்த அபூா்வமான நேரத்தில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக ஐதீகம். எனவே, இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வைக்கும் வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Advertisement

Advertisement

மகாபாரதத்தில் யுத்தத்தின்போது அா்ஜுனனுக்கு காலத்தின் முக்கியத்துவத்தை கிருஷ்ணா் உணா்த்தினாா். ‘காலமே நான்’ என்று கூறிய கிருஷ்ண பரமாத்மா சூரியனின் இயக்கத்தை வைத்தே புண்ணிய காலங்களை கணித்தாா். விஷ்ணுபதி நேரத்தில் செய்யப்படும் தா்மம் போா்க்களத்தில் அா்ஜுனன் பெற்ற தெளிவைப்போல நம் வாழ்வில் குழப்பங்கள் நீங்கி நோ் வழியாக வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 13, மே 15, ஆகஸ்ட் 17 ஆகிய நாள்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விஷ்ணுபதி புண்ணிய காலம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் குவிந்தனா். கொடிமரம், பெருமாள் மற்றும் தாயாா் சந்நிதிகளைச் 27 முறை சுற்றி வந்து வழிபட்டனா்.

இதையடுத்து, உற்சவா் பெருமாள் மற்றும் தாயாருக்கு பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனா்.