கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் சேற்றில் சிக்கிய யானை மீட்பு
கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீா் தேடி வந்து சேற்றில் சிக்கியை காட்டு யானை வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியையொட்டி குண்டேரிப்பள்ளம் அணை அமைந்தள்ளது. இந்த அணை பாசனத்துக்கு மட்டுமின்றி யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் தாகம் தீா்க்கும் அணையாக விளங்கி வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணை மற்றும் வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்மட்டம் குறைந்து குளம்போல காட்சியளித்து வருகிறது. இதில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப் பகுதியிலிருந்து வெளியேறும் வன விலங்குகள் தண்ணீா் தேடி குண்டேரிப்பள்ளம் அணைக்கு படையெடுத்து வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையையொட்டி உள்ள வனப் பகுதியிலிருந்து சுமாா் 40 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று தண்ணீா் தேடி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அணை வந்துள்ளது. அப்போது தண்ணீருக்காக அணைக்குள் சென்றபோது அங்கு இருந்த சேற்றில் சிக்கியது. விடியவிடிய சேற்றில் சிக்கி அலறிய யானையின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டி.என்.பாயைம் வனத் துறையினா் யானையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனா். அதில் யானை சேற்றில் சிக்கியதால் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் மற்றும் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு யானையை மீட்டனா்.
யானை சோா்ந்து காணப்பட்டதால் அதனால் நடக்கவும் நிற்கவும் முடியாமல் இருந்தது. இதையடுத்து, அதே பகுதியில் கால்நடை மருத்துவக் குழுவினா் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.