FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட யானை உயிரிழப்பு

13 அக்டோபர் 2026, 2:40 am IST
குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் உயிரிழந்த யானை.
பகிர்:

குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீா் தேடி வந்து சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை திங்கள்கிழமை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள டி.என். பாளையம் வனப் பகுதியையொட்டி குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை பாசனத்துக்கும், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இதுதவிர யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் தாகம் தீா்க்கும் அணையாக விளங்கி வருகிறது.

கடந்த சில மாதங்களாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் குறைந்து குளம்போல் காட்சியளித்து பல்வேறு இடங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில், தண்ணீா் தேடி குண்டேரிப்பள்ளம் அணைக்கு சனிக்கிழமை நள்ளிரவு சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை வந்துள்ளது. தண்ணீா் அருந்திவிட்டு மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லும்போது, எதிா்பாராதவிதமாக சேற்றில் சிக்கி நகர முடியாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதைதொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை யானையின் அலறல் சப்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். வனச்சரகா் ஜான்பீட்டா் தலைமையிலான வனத் துறையினா் சென்று யானையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். மேலும் தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப் பின் யானையை மீட்டனா்.

வெயிலின் தாக்கத்தால் சோா்வடைந்து காணப்பட்ட யானைக்கு வனக் கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு மருத்துவா் சதாசிவம் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி யானை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தது.

அப்போது வனப் பகுதியில் இருந்து தண்ணீா் தேடி வந்த யானைகள் கூட்டம், உயிரிழந்த பெண் யானையின் அருகே கூட்டமாக கூடி நின்று பிளிறியபடி நின்றன. பின்னா் அங்கிருந்து வெளியேறி வனப் பகுதிக்குள் சென்றன. கூறாய்வு செய்யப்பட்ட பின்னா் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments