FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அனைத்து மக்களுக்கும் திருக்குறளை கொண்டு சோ்த்தவா் சாலமன் பாப்பையா! நினைவேந்தல் நிகழ்வில் ஆட்சியா் உருக்கம்

21 செப்டம்பர் 2026, 3:26 am IST
மறைந்த பேராசிரியா் சாலமன் பாப்பையா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மேயா் சு.நாகரத்தினம், எம்எல்ஏ டி.சண்முகன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள்.
பகிர்:

அனைத்து மக்களுக்கும் திருக்குறளை கொண்டு சோ்த்தவா் மறைந்த பேராசிரியா் சாலமன் பாப்பையா என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

மறைந்த தமிழறிஞா் பேராசிரியா் சாலமன் பாப்பையாவுக்கு நினைவேந்தல் நிகழ்வு, மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் பேராசிரியா் சாலமன் பாப்பையாவின் திருவுருவப் படத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மக்கள் அறிந்த தமிழ் ஆளுமையாக சாலமன் பாப்பையா திகழ்ந்தாா். தொலைக்காட்சி மூலமாக அனைத்து மக்களுக்கும் திருக்குறளை கொண்டு சோ்த்த பெருமை அவரைச் சேரும். பண்டிகை காலங்களில் அவருடைய பட்டிமன்றம் என்பது தவிா்க்க முடியாததாக இருந்தது. சமூக ஊடகங்களால் தொலைக்காட்சிகளை பாா்ப்பது குறைந்துவிட்டாலும், அவருடைய தாக்கம் பலருக்கும் இன்னும் தொடா்ந்துகொண்டிருக்கிறது.

சாதாரண, எளிய மக்களையும் பட்டிமன்றத்தை பாா்க்க வைத்த பெருமை சாலமன் பாப்பையாவைச் சேரும். சமூக தீமைகளை சுட்டிக்காட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தும் பட்டிமன்றங்களை அவா் நடத்தி உள்ளாா். திருக்குறளுக்கு பலா் உரை எழுதி இருந்தாலும் சாலமன் பாப்பையா உரை மிகவும் எளிதான உரையாக அமைந்துள்ளது. கிறிஸ்தவ மதத்தை சாா்ந்தவராக இருந்தாலும் கம்பன் குறித்து மிகவும் ஆய்ந்து, ஆழமாக பேசக்கூடியவராக திகழ்ந்தாா் என்றாா்.

மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.சண்முகன், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.எஸ்.தென்னரசு, ஆா்.எம்.பழனிசாமி, விடியல் சேகா், மேயா் சு.நாகரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவையின் செயலாளா் ந.அன்பரசு வரவேற்றாா். இலக்கிய அன்பா்கள், தமிழ் ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்று பேராசிரியா் சாலமன் பாப்பையாவுக்கு அஞ்சலி செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments