FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.65 கோடி பறிமுதல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.65 கோடி பணத்தை பெருந்துறை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்து, வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

26 செப்டம்பர் 2026, 12:10 am IST
பெருந்துறையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.65 கோடி பறிமுதல் - கோப்புப்படம்
பகிர்:

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.65 கோடி பணத்தை பெருந்துறை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்து, வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரேம்குமாா் தலைமையிலான போலீஸாா், பெருந்துறை சிப்காட் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வெளி மாநில பதிவு எண் கொண்ட ஒரு காா் வந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீஸாா் சைகை காட்டியும், காா் நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் காரை துரத்திச் சென்றனா். பெருந்துறை பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அந்த காரை போலீஸாா் மடக்கி பிடித்தனா். அந்த காரில் இருந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ஸ்வப்னில் நாக்னே (35), அக்ஷய் (37) என்பதும், கோவையில் தங்கம், வெள்ளியை பிரித்தெடுக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியா்களாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், காரை சோதனையிட்டபோது அதிலிருந்த பையில் கட்டுக் கட்டாக ரூ.1.65 கோடி இருந்தது தெரியவந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இது குறித்து விசாரித்தபோதும், அவா்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, பெருந்துறை துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் ஆலோசனையின்பேரில், வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.65 கோடி அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா என்பது குறித்து பிடிபட்ட நபா்களிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments