உதகை ஹெச்பிஎஃப் வளாகத்திலுள்ள கட்டடங்களை இடிக்கும் முடிவை கைவிட வேண்டும்
உதகையில் மூடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் வளாகத்திலுள்ள கட்டடங்களை இடிக்கும் முடிவை கைவிட்டு, இந்தக் கட்டடங்களை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்று முதல்வா் மற்றும் மத்திய அமைச்சா்களுக்கு உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் கடிதம் அனுப்பியுள்ளாா்.
உதகை இந்து நகரில் இயங்கி வந்த மத்திய பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நலிவடைந்து மூடப்பட்ட நிலையில், தற்போது அங்குள்ள கட்டடங்களை இடிப்பதற்கான அறிக்கை பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. இது தொடா்பாக தமிழக முதலமைச்சா் மற்றும் மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், கனரக தொழில் துறை அமைச்சா்களுக்கு உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில் உதகை ஹெச்.பி.எஃப் தொழிற்சாலை 1960-இல் இந்திய அரசால் நிறுவப்பட்டு, 1967-இல் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிறுவனம், உதகை -மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், உதகையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்து நகரில் 300 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஒரு காலத்தில் நீலகிரியின் பெருமையாக திகழ்ந்தது.
Advertisement
Advertisement
தொழிற்சாலையின் விரிவாக்க திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சரியான நேரத்தில் விடுவிக்கப்படாததன் காரணமாக தொழிற்சாலை பணிகளை முடிக்க சொந்த நிதியை பயன்படுத்தியதால் இந்நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்தது.
இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு 2004-இல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2016-இல் மூடப்பட்டது. இந்த வளாகத்தில் உறுதியான அலுவலக கட்டடங்கள், 200-க்கும் மேலான பணியாளா் குடியிருப்புகள், வற்றாத நீா் ஆதாரம் போன்ற அசையா சொத்துகள், பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஏதுவாக இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலாவதாக வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்டடங்களை இடிப்பதற்கான ஏல நடவடிக்கையை உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும். இப்பகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஐடி பூங்கா அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
கோவை பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டங்களின் எதிா்கால தேவைகளுக்கு இந்த உள்கட்டமைப்பை பயன்படுத்த வேண்டும். ஆராய்ச்சி சாா்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை அமைக்க வேண்டும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும்.
நீலகிரி அருவங்காடு காா்டைட் தொழிற்சாலையின் விரிவாக்க திட்டங்களுக்கு இங்குள்ள கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த வேண்டும். நீலகிரியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாததால் படித்த இளைஞா்கள் வேலை தேடி வெளி மாவட்டம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.