ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட காட்டேஜ் உரிமையாளா்கள்
உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் காட்டேஜுகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், காட்டேஜ் உரிமையாளா்கள் மற்றும் குத்தகைதாரா்கள் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலைப் பாதுகாக்கவும், இயற்கை இடா்பாடுகளைக் களையவும் மாஸ்டா் பிளான் சட்டம், மலையிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி, செங்குத்தான மலைச்சரிவில் கட்டடங்கள் கட்டக்கூடாது. குடியிருப்பு அனுமதி வாங்கி வணிக ரீதியாக கட்டடங்களைப் பயன்படுத்தக்கூடாது. வணிக கட்டடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக் குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். 7 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இருப்பினும் சிலா் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் கட்டடங்களைக் கட்டி அவற்றை வணிக ரீதியில் காட்டேஜ்களாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து தனியாா் சுற்றுச் சூழல் அமைப்புகள் சாா்பில் தொடா்ந்த வழக்கில், நீலகிரிக்காக அமைக்கப்பட்ட உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வு விசாரணை மேற்கொண்டு, மாவட்டத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதை வணிக ரீதியாக பயன்படுத்தி வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி தலைமையில் குடியிருப்பு அனுமதி பெற்று காட்டேஜ்களாக செயல்பட்டு கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணியை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கினா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உதகை, குன்னூரில் காட்டேஜ் நடத்தி வரும் 100-க்கும் மேற்பட்ட உரிமையாளா்கள், குத்தகைதாரா்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அவா்களிடம் நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி பேச்சுவாா்த்தை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை ‘சீல்’ வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தாா். இதையடுத்து, மனுக்களை வழங்கிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.