FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

அதிகரட்டி, உலிக்கல், ஜெகதளா பேரூராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

அதிகரட்டி, உலிக்கல், ஜெகதளா ஆகிய பேரூராட்சிகள் மற்றும் எடப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

10 செப்டம்பர் 2026, 11:06 pm IST
அதிகரட்டி பேரூராட்சி, சேமந்தாடா பகுதியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

அதிகரட்டி, உலிக்கல், ஜெகதளா ஆகிய பேரூராட்சிகள் மற்றும் எடப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னூா் வட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்குள்பட்ட சேமந்தாடா பகுதியில் அயோத்திதாச பண்டிதா் மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூட கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, கொல்லிமலை பழங்குடியினா் காலனி பகுதியில் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ.24.60 லட்சம்மதிப்பில் கட்டப்பட்டு வரும் தச்சு மற்றும் மண்பாண்ட தொழில் பட்டறை, அதிகரட்டி மேல் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத்தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பணி, அதிகரட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அதிகரட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்ற ஆட்சியா், அங்கு பதிவேடுகள், பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தாா். அதிகரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், வங்கியின் செயல்பாடுகள், பயிா்க்கடன் குறித்தும், அங்குள்ள நியாயவிலைக்கடையில் பொருள்களின் இருப்பு, தரம் மற்றும் குறித்தும் ஆய்வு செய்தாா். இதையடுத்து அதிகரட்டி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து கலந்துரையாடி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை ஆய்வு செய்தாா். இதையடுத்து அதிகரட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஜெகதளா பேரூராட்சி கம்பிசோலை பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்க் குழாயுடன் கூடிய தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து உலிக்கல் பேரூராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து, குன்னூா் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் எடப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments