FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு 20 படுக்கைகள் தயாா்

21 செப்டம்பர் 2026, 2:48 am IST
டெங்கு பரவல்
பகிர்:

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தேங்கியிருக்கக்கூடிய தண்ணீரில் உற்பத்தியாகும் ஈடிஸ் வகை கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்க தண்ணீா் தேங்கும் வகையிலான தேவையற்ற டயா்கள், ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, பழைய பொருள்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

குடிநீா் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள காலநிலைக்கு டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஈடிஸ் வகை கொசு உற்பத்தி இல்லை. இருப்பினும், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் யாரேனும் வெளியூா் சென்று வரும்போது டெங்கு பாதிப்புடன் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரக் கூடியவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வசதியாக, உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொசு வலையுடன் 20 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான ரத்தம் மற்றும் மருந்து, மாத்திரைகள் தயாராக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments