திமுக தலைவர் கருணாநிதி மறைவு: திருப்பூர் மாவட்டத்தில் அமைதிப் பேரணி
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைதிப் பேரணி நடந்தது. இதில் அனைத்து கட்சியினரும் திரளாக பங்கேற்றனர்.
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைதிப் பேரணி நடந்தது. இதில் அனைத்து கட்சியினரும் திரளாக பங்கேற்றனர்.
பல்லடத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.என்.திருமூர்த்தி தலைமையில் புதன்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. காமராஜர் திடலில் இருந்து புறப்பட்டு கடை வீதி, திருச்சி சாலை வழியாக மீண்டும் திடலை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து அங்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நகரப் பொறுப்பாளர் மா.லோகநாதன் ஆகியோர் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் நகரச் செயலாளர் என்.ராஜேந்திரகுமார், அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், சூ.தர்மராஜன், சரளை ரத்தினசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் ப.ஈஸ்வரமூர்த்தி, எம்.பி.சதாசிவம், ஆறாக்குளம் ரவி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்.வி.ராமசாமி, எஸ்.ஜெகதீசன், முத்துக்குமார், பாஜக வினோத், ரமேஷ், கம்யூனிஸ்ட் கட்சி ப.கு.சத்தியமூர்த்தி, மணி, பரமசிவம், மதிமுக பாலு உள்பட பலர் பங்கேற்றனர். இதில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருணாநிதி மறைவையொட்டி பல்லடத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
1லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
வெள்ளக்கோவிலில்..
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி, வெள்ளக்கோவிலில் புதன்கிழமை ஒன்றிய, நகர திமுக சார்பில் நடந்த அமைதிப் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். தாராபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரின் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
காங்கயத்தில்...
காங்கயத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட அமைதிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் துவங்கிய பேரணியை காங்கயம் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜ்குமார் மன்றாடியார் துவக்கி வைத்தார். நகர திமுக செயலாளர் ஏசிஜி.மணிவண்ணன், காங்கயம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.எஸ்.சிதம்பரம் ஆகியோர் தலைமையில் நடந்த பேரணி காங்கயம் பேருந்து நிலையம், கடைவீதி, காவல் நிலையம், தாராபுரம் சாலை வழியாக 2 கி.மீ. தூரம் சென்று காங்கயம் நீதிமன்றம் அருகே நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், அரிசி ஆலை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலை நிர்வாகிகள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதிப் பேரணியும், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.