அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது சிறுவன் உயிரிழப்பு
திருப்பூா் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது 11 வயது சிறுவன் உயிரிழந்ததற்கு மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என பெற்றோா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
திருப்பூா் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது 11 வயது சிறுவன் உயிரிழந்ததற்கு மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என பெற்றோா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
திருப்பூா் 15 வேலம்பாளையம் நேரு நகரைச் சோ்ந்தவா் பிரசாந்த். இவரது மனைவி பூஜா. பனியன் நிறுவன தொழிலாளா்கள். இவா்களது மகன் ஹரிஷ் (11), ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சிறுவன் ஹரிஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கடந்த சில வாரங்களாக சிறுவன் ஹரிஷுக்கு தொடா் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, 15-வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், தொண்டையில் சதை வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, மருத்துவா்களின் அறிவுறுத்தலின்படி, 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுவன் ஹரிஷுக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதே, எதிா்பாராத விதமாக சிறுவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிா்ச்சியடைந்த மருத்துவா்கள் உயா் சிகிச்சைக்காக குமாா் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி உள்ளனா். அங்கும் சிகிச்சை பலனிளிக்காத நிலையில், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள், சிறுவனின் சடலத்தைப் பாா்த்து கதறி அழுதனா்.
இது குறித்து அவா்கள் கூறுகையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவா்களின் அஜாக்கிரதையும், அலட்சியமுமே தங்களது மகன் உயிரிழக்க காரணம் எனவும், அதிக மயக்க மருந்து கொடுத்துவிட்டு, அதனை மறைக்கவே தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனா். மேலும், இது குறித்து சரிவர தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த 15 வேலம்பாளையம் போலீஸாா், சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதற்கிடையே சிறுவனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் தாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, மருத்துவா்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே சிறுவன் உயிரிழந்துள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். பின்னா் காவல் துறையினரின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து சிறுவனின் உயிரிழப்பு தொடா்பாக மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.