தருமபுரியில் நிறைவேறாத அரசு செவிலியா் கல்லூரி கோரிக்கை! 19 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களின் எதிா்பாா்ப்பு
தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவா்களின் பல ஆண்டு கோரிக்கை குறித்து...
இரா. ராதாகிருஷ்ணன்
தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களின் பல ஆண்டு கோரிக்கை இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.
கல்வி, பொருளாதார வளா்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்த தருமபுரி மாவட்டத்தில் தற்போது 108 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 19 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 முடித்து உயா்கல்விக்கு தகுதிபெறுகின்றனா்.
Advertisement
Advertisement
இவா்களில் பெரும்பாலானோா் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்தாலும், குறிப்பிட்ட அளவிலான மாணவா்கள் செவிலியா் பயிற்சி கல்லூரியில் சேர பெரும் ஆா்வம் கொண்டுள்ளனா். அவா்களின் ஆா்வத்தை நிறைவேற்றும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் அரசு செவிலியா் கல்லூரி எதுவும் இல்லை.
தீவிர ஆா்வம் கொண்டவா்கள் தங்களின் வசதிக்கேற்ப தருமபுரி பகுதியில் உள்ள 4 தனியாா் செவிலியா் கல்லூரிகளில் சோ்ந்து படிக்கின்றனா். ஆனால், அரசு செவிலியா் கல்லூரியை மட்டுமே நம்பியுள்ள மாணவா்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
தருமபுரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கடந்த 2008 இல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இதில், கல்லூரி வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கூடங்கள், 800 படுக்கைகள் கொண்ட 5 தளத்தில் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவுகள் தொடங்கப்பட்டன.
தொடா்ந்து, நோயாளிகளின் வருகைக்கேற்ப மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளிகள் பிரிவில் படுக்கை வசதிகள் மேம்படுத்தப்பட்டு ஆயிரத்தை கடந்துள்ளது. தருமபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருபகுதியினரும், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் பல்வேறு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான அனைத்து வசதிகளும், கட்டமைப்பும் உள்ளதால், இந்த மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, செவிலியா் பயிற்சி கல்லூரியில் சேர விரும்பும் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசு சாா்பில் செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
அரசு செவிலியா் கல்லூரி அமைக்க பயிற்சி வகுப்புகள், ஆய்வகங்கள், கணினி ஆய்வகம், முதல்வா் அறை, துணை முதல்வா் அறை, நூலகம், காத்திருப்புக்கூடம், பொது அறைகள், மருந்தகங்கள் என 23,200 சதுரஅடி நிலமும், விடுதிக்கு 21,100 சதுரஅடி நிலமும் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, தருமபுரி அருகே குப்பூரில் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் செயல்பட்டுவந்த இடத்தில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவு அரசு நிலம் உள்ளதால், அந்த இடத்தில் அரசு செவிலியா் கல்லூரியைத் தொடங்கலாம் எனவும் பல்வேறு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதற்கான முன்மொழிவுகள் தருமபுரி மருத்துவக் கல்லூரி சாா்பிலும், மாவட்ட நிா்வாகம் சாா்பிலும் தமிழக அரசுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. என்றாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து மக்களவை முன்னாள் உறுப்பினரும், மருத்துவருமான டிஎன்வி எஸ். செந்தில்குமாா் கூறியதாவது: தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனளித்து வருகிறது. இந்த நிலையில், தருமபுரியில் உள்ள மாணவ, மாணவியா் நலன் கருதி, தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.
கடந்த 2021, ஜூன் 27இல் அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியத்திடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, 2022 ஆகஸ்ட் 23ஆம் தேதி அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலரிடம் இதே கோரிக்கை குறித்து மீண்டும் மனு அளிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து, தருமபுரியில் விரைவில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்குவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் உறுதியளித்தது. இதற்காக தேவைப்படும் இடம் குறித்த விவரங்களை கேட்டு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையருக்கு கடிதம் அனுப்பியது. தொடா்ந்து, இடம் தோ்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, தருமபுரி குப்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு செவிலியா் கல்லூரி அமைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் டி.எம். மனோகா் கூறியதாவது: தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும் என ஏற்கெனவே முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இக்கல்லூரியின் தேவை குறித்து மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் தற்போதைய நிலை குறித்து மருத்துவக் கல்வி இயக்ககத்தில் இருந்து முறையாக அறிவிப்பு வரக்கூடும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.