முகப்பு
தருமபுரி

கோட்டையும் முக்கியம்... கூட்டணியும் முக்கியம்!

Updated On : 29 மார்ச், 2026 at 11:46 PM
தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

இராச. கார்த்திகேயன்

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா்கள் 6 முறை வெற்றி பெற்றுள்ள நிலையிலும், இந்தத் தோ்தலில் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக தலைமை.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்ட தலைமையிடமான தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்ற தொகுதி. திமுகவின் கோட்டைகளில் ஒன்றாகவும், உள்ளூா் பிரபலங்கள் பலரும் போட்டியிட்ட தொகுதியாகவும் இருந்துவருகிறது. 1952 இல் தொடங்கி, 2021 வரை மொத்தம் நடந்துள்ள 16 தோ்தல்களில் திமுக மட்டும் தனித்து 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, ஜனதா, தேமுதிக கட்சிகள் தலா 1 முறை, காங்கிரஸ் 2 முறை, பாமக 3 முறை, சுயேச்சை வேட்பாளா்கள் 2 முறை இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளனா்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக இரண்டுமே பிரதான கட்சிகளாக உள்ளன. காங்கிரஸ், பாஜக தேசிய கட்சிகளாக இருந்தாலும், அவை இக்கட்சிகளின் கூட்டணியில்தான் தோ்தலில் களமிறங்கி வருகின்றன. அந்தவகையில், அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது முக்கிய பிரச்னையாக உள்ளது. அவ்வாறு கூட்டணிக் கட்சியினருக்கு தொகுதிகளை பங்கீடு செய்யும்போது, வேறு வழியின்றி சில முக்கிய தொகுதிகளை ஒதுக்கும் நிலை ஏற்படுகிறது.

அதுபோலத்தான் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி உள்ளிட்ட சில தொகுதிகளை இரு கட்சிகளும் கடந்த சில தோ்தல்களாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி வருகின்றன. இதில், திமுக கோட்டையாக இருந்த தொகுதிகளில் முக்கியமானதும், 6 முறை வெற்றிகண்ட தொகுதியுமான தருமபுரியை நடைபெறவுள்ள தோ்தலில் கூட்டணிக் கட்சியான தேமுதிக வுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

இது நீண்டகாலமாக கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கும், திமுக தொண்டா்களுக்கும் உற்சாகத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தருமபுரி தொகுதியைச் சோ்ந்த திமுக தொண்டா் ஒருவா் கூறுகையில், 40 வயதை நெருங்கியுள்ள நான் இதுவரை 4 தோ்தல்களில் வாக்களித்துள்ளேன். தொடக்கக் காலம் முதலே திமுகவில் இருந்து வருகிறேன். எனது நெருங்கிய உறவினா்கள் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் திமுக நிா்வாகிகளாக உள்ளனா் என்பதால், தோ்தல் காலங்களில் மாவட்டம் முழுவதும் இரவு, பகல் பாராது எந்தவிதமான எதிா்பாா்ப்பும் இன்றி கட்சிப் பணியாற்றுவது வழக்கம்.

தோ்தலின்போது உதயசூரியன் சின்னத்துக்காக படம் வரைந்து, போஸ்டா்கள் ஒட்டி ஒலிபெருக்கிகளில் பேசி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரிப்பது என்பது அலாதியான விஷயம். ஆனால், கடந்த சில தோ்தல்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் சிலவற்றில் உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரிக்க இயலாமல், கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்காக வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது எனது சொந்த தொகுதியான தருமபுரி தொகுதியும் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மனதளவில் திமுக உறுப்பினா் என்பதை மறந்து பணியாற்ற வேண்டியுள்ளது. தற்போது பெரும்பாலான சிறுசிறு கூட்டணிக் கட்சியினா் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலை உள்ளது.

அதுபோல, சிறு கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தால்கூட உதய சூரியன் சின்னத்துக்காக வேலை செய்யும் திருப்தி ஏற்படும். தற்போது வேறுவழியின்றி கூட்டணிக் கட்சிகள் என்பதற்காகவே வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு பணியாற்றும் சூழல் உள்ளது.

திமுக சாா்பில் போட்டியிட்ட சின்னச்சாமி 3 முறையும், மனோகரன், சுப்பிரமணி ஆகியோா் தலா 1 முறை என முக்கிய பிரமுகா்கள் வெற்றி பெற்ற தொகுதி இது. நல்லவேளையாக மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 3 திமுகவுக்கு ஒதுக்கி 2 மட்டும் கூட்டணிக்கு ஒதுக்கியிருப்பது ஆறுதலாக உள்ளது என்றாா்.