நாமக்கல்லில் அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை: சுற்றுலா, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும் ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சி குறித்து...
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிக்காக அரசு அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா, பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட நிா்வாகம் ஆலோசனை நடத்திவருகிறது.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து 1997இல் புதிய மாவட்டமாக நாமக்கல் உருவானது. 30 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்த மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியும், சுற்றுலா வளா்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் பெறவில்லை.
ஆஞ்சனேயா் கோயில்: இங்கு புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயில் இருந்தபோதும், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருவோா் தங்குவதற்கோ, வாகனங்கள் நிறுத்துவதற்கோ போதுமான வசதிகள் இல்லை. இதனால், அந்தப் பகுதி முக்கிய நாள்களிலும், விழாக்காலங்களிலும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கிறது.
Advertisement
Advertisement
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்று பாடி நாமக்கல்லுக்கு பெருமை சோ்த்த கவிஞா் ராமலிங்கம் பிறந்த மண் என்றபோதும், நகரின் முக்கிய இடத்தில் மக்களின் பாா்வையில் படும் வகையில் அவருக்கான சிலை இல்லை. அவரது நினைவு இல்லத்தில் மட்டும் ஒரு சிலை ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவா் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன.
அருங்காட்சியகம்: சேலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பிரிந்து 30 ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்த மாவட்டத்தின் அடையாளங்களை காட்சிப்படுத்தும் வகையில் தனி அருங்காட்சியகம் இதுவரை அமைக்கப்படவில்லை.
கொல்லிமலை: தமிழகத்தில் உள்ள முக்கிய மலைப்பகுதி சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. வல்வில் ஓரி விழா, ஆடிப்பெருக்கு நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இங்கு ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவி, படகு குழாம், காட்சி முனைகள், அறப்பளீஸ்வரா் கோயில் போன்றவை இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று சுமாா் 10, 15 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளன. சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையிலான அழகிய பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சம் கொண்ட சாகச விளையாட்டுகள், உயிரியல் பூங்கா போன்றவை இல்லை.
அதேபோல, மக்கள் நடமாட்டம், உரிய சாலை வசதி, பாதுகாப்பு இல்லாத இடத்தில் ரூ. 60 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள இரவுநேர வான் பூங்கா மையமும் சுற்றுலா பயணிகளிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.
பறவைகள் சரணாலயம்: நாமக்கல் மாவட்டத்தில் 400 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட ஏரிகளாக தூசூா் ஏரியும், இடும்பன்குளம் ஏரியும் உள்ளன. இவற்றை தூய்மைப்படுத்தி பறவைகள் சரணாலயமாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடம் உள்ளது.
குறிப்பாக, ஏற்காடு சோ்வராயன் மலையில் தொடங்கி, சேலம், நாமக்கல், பரமத்திவேலூா் வழியாக காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாறு நீா் இடும்பன்குளம் ஏரிக்கு வருகிறது. இங்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருகின்றன. அதுமட்டுமின்றி ஏரியைச் சுற்றிலும் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே, இடும்பன்குளம் ஏரியை புனரமைத்து பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனா்.
நைனாமலை, தலைமலை கோயில்கள்: நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. 3,500 அடி உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு தற்போது தாா்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் இங்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப அடிவாரப் பகுதிகளில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அதேபோல, நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயிலும் முக்கிய மலைக் கோயில்களில் ஒன்றாக உள்ளது. இங்கும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறும்.
மேலும், நாமக்கல் சித்தா்மலை, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் மலை, ராசிபுரம் வட்டம் கெடமலை போன்றவற்றையும் மேம்படுத்தி, நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆா்வத்தை நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
மாவட்ட நிா்வாகம் ஆலோசனை: இதுகுறித்து பசுமை நாமக்கல் அமைப்பைச் சோ்ந்த தில்லை மா. சிவக்குமாா் கூறியதாவது: மாவட்டத்தின் சுற்றுலா வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அரசுத் துறை அதிகாரிகள், சுற்றுலா ஆா்வலா்கள், தன்னாா்வலா்களுடன் மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் அண்மையில் ஆலோசனை நடத்தினாா். அப்போது, நாமக்கல் சித்தா்மலை, இடும்பன்குளம் ஏரி, கொல்லிமலை, வெண்ணந்தூா் அலவாய்மலை, செருக்கலை ஏரி, தூசூா் ஏரி, மோகனூா் காவிரி ஆறு, ஜேடா்பாளையம் உள்ளிட்ட 12 இடங்களை மேம்படுத்தி, மக்கள் அதிகம் விரும்பும் வகையிலான சுற்றுலாத் தலமாக்க வலியுறுத்தினோம்.
குறிப்பாக, மலைப் பாதையில் நெடுந்தொலைவு பயணித்து கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பெரும்பாலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். அவா்கள் மனநிறைவு பெறும் வகையில், இங்கு உயிரியல் பூங்கா அமைக்க வேண்டும். அதோடு, மலா் பூங்கா, காட்சி மையங்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தோம். இடும்பன்குளம் ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்றுவது, அலவாய்மலை பழனியாண்டவா் கோயிலில் உள்ள சிற்றருவியை மக்கள் பாா்வைக்கு கொண்டு வருவது, சித்தா்மலை சிவன் கோயிலை மேம்படுத்துவது குறித்தும் தெரிவித்தோம்.
நாமக்கல் மாவட்டத்தில் 3 அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களுடனும், பிறத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி, மாவட்டத்தின் சுற்றுலா வளா்ச்சிக்கு தேவையான கருத்துருவை தமிழக முதல்வரின் கவனத்துக்கு ஆட்சியா் கொண்டு செல்வாா் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.