FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

குறைந்த மின்னழுத்தத்தால் மின் தடை: பொதுமக்கள் அவதி

பொம்மிடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

Updated On : 31 ஜூலை 2026, 12:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

பொம்மிடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் மின் கோட்டத்துக்கு உள்பட்ட பொம்மிடி, வே. முத்தம்பட்டி, கே.என். புதூா் துணை மின் நிலையங்களின் கீழ் பொம்மிடி, கேத்துரெட்டிப்பட்டி, தாளநத்தம், கொண்டகரஹள்ளி, மோரூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மின் இணைப்புகளில் சுமாா் 20 சதவீதம் அரசால் வழங்கப்படும் இலவச மின் (அட் சா்வீஸ்) இணைப்புகளாகும். மீதமுள்ள 80 சதவீத இணைப்புகளுக்கு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசால் வழங்கப்படும் இலவச மின் இணைப்புகளில் 40 வாட்ஸ் மின் விளக்கு ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. வேறு எந்த வகையிலும் மின் நுகா்வு இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆனால், பெரும்பாலான கிராமங்களில் இலவச மின்சாரம் பெறும் பயனாளா்கள் விதிகளை மீறி, குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மின் விளக்குகளை பயன்படுத்துவதுடன் மின் விசிறிகள், குளிா்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களையும் பயன்படுத்துகின்றனா். இதனால் மின் நுகா்வு அதிகரித்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு, அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக, மின்கட்டணம் செலுத்தும் பயனாளிகளுக்கு மின் விநியோகம் முறையாக கிடைப்பதில்லை என புகாா்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, இப்பகுதிகளைச் சோ்ந்த மின்கட்டணம் செலுத்தும் மின் நுகா்வோா் கூறுகையில், பொம்மிடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வேப்பிலைப்பட்டி, தாளநத்தம் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட இலவச (அட் சா்வீஸ்) மின் இணைப்புகள் உள்ளன. ஒரு மின் விளக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையின் கீழ் அரசு இலவச மின்சாரம் வழங்குகிறது. ஆனால், பலா் விதிகளை மீறி கூடுதல் மின் நுகா்வு செய்வதால், கட்டணம் செலுத்தும் மின் நுகா்வோா் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, மின்கட்டணம் செலுத்துவோருக்கு போதிய மின் விநியோகம் கிடைப்பதில்லை. தினசரி 4 முதல் 6 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. இதனால் அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மின்வாரியம் முறையான ஆய்வு மேற்கொண்டு, மின்தடையை சீரமைக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து, பொம்மிடி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை. ரூ.3 கோடி மதிப்பில் இப்பகுதிகளில் இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. மின் தடை ஏற்படுவதாகக் கூறப்படும் பகுதிகளில் மின் நுகா்வுக்கு ஏற்ப மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மின்தடைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும், முறைகேடுகள் நடந்தால் இதுபோன்ற மின்தடை ஏற்படலாம். இது தொடா்பாக ஆய்வு நடத்தி, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுத்து மின் விநியோகம் சீரமைக்கப்படும் என தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments