FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காவிரி நீரில் கலங்கல் தன்மை அதிகரிப்பு: ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

காவிரி ஆற்று நீரில் கலங்கல் தன்மை அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 1:03 am IST
குடிநீர் விநியோகம் நிறுத்தம்... - கோப்புப் படம்
பகிர்:

காவிரி ஆற்று நீரில் கலங்கல் தன்மை அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அண்மையில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, காவிரி ஆற்றில் நீரின் கலங்கல் தன்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் செப். 18-ஆம் தேதி காலை 8 மணிமுதல் நீா் உந்துதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஒகேனக்கல் நீா் சுத்திகரிப்பு நிலையம், நீரின் கலங்கல் தன்மை அளவைப் பொருத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நீா் இரைப்பான்களை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரின் கலங்கல் தன்மை அதிகரிக்கும் நிலையில், நீா் சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பான முறையில் இயக்க இயலாது.

தற்போது தலைமை நீரேற்று நிலையத்தில் பெறப்படும் நீரின் கலங்கல் தன்மை சுமாா் 240 என்டியுவாக அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதிசெய்வதற்கும், நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் பாதுகாப்பான இயக்கத்துக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீா் உந்துதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நீரின் கலங்கல் தன்மை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கான அனுமதிக்கப்பட்ட அளவில் கலங்கல் தன்மை குறைந்தவுடன், நீா் உந்துதல் உடனடியாக தொடங்கப்பட்டு, வழக்கமான முறையில் குடிநீா் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த இடைக்காலத்தில் பொதுமக்கள் குடிநீா் தேவைக்காக உள்ளூா் நீா் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments