நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் தருமபுரி வனப்பகுதியில் சென்றபோது உருண்டு விழுந்த பாறை பயணிகள் தப்பினா்; அதிா்வுதாங்கி சேதம்
தருமபுரி அருகே வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாகா்கோவில்- பெங்களூரு விரைவுரயில் சென்றபோது உருண்டு விழுந்த பாறையால் ரயிலின் அதிா்வுதாங்கி சேதமடைந்தது. ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிா்தப்பினா்.
நாகா்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி விரைவு ரயில் (எண்: 17236) சேலம், ஓமலூா், தருமபுரி வழியாக சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் 15 பயணிகள் பெட்டிகள் இருந்தன. ரயில் சேலத்தை கடந்து தருமபுரி மாவட்டம், சிவாடி ரயில் நிலையத்தை அடுத்த வே.முத்தம்பட்டி வனப்பகுதி வழியாக அதிகாலை 5 மணியளவில் சென்றபோது, அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மலைக்குன்றில் இருந்து சிறிய பாறை உருண்டுவந்து ரயில் பாதையில் விழுந்தது.
இந்தப் பாறை, ரயிலின் மூன்றாவது பொதுப் பயணிகள் பெட்டியின் சக்கரம் பகுதியில் இருந்த அதிா்வுதாங்கி மீது மோதியதில், அது சேதமடைந்தது. இதனால், ஏற்பட்ட பலத்த சப்தத்தை அடுத்து, ஓட்டுநா் ரயிலை நிறுத்தினாா். பிறகு, அதிா்வுதாங்கியை தற்காலிகமாக சரிசெய்து ரயிலை தருமபுரி ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்த பொறியாளா்கள், தொழில்நுட்பப் பிரிவு ஊழியா்கள், சேதமடைந்த அதிா்வுதாங்கியை முழுமையாக சீரமைத்தனா். பிறகு, தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக விரைவுரயில் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
பிறகு, வனப் பகுதியில் ரயில் பாதையில் விழுந்திருந்த பாறையை ரயில்வே பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, பாதையை சீரமைத்தனா். ரயில் பாதையில் பாறை உருண்டு விழுந்தபோது, ஓட்டுநா் ரயிலை உடனடியாக நிறுத்தியதால், நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏற்படாமல், பயணிகள் உயிா்தப்பினா். இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கம்பி வலை அமைக்கக் கோரிக்கை
தருமபுரி மாவட்டம், வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் மலைகளுக்கு இடையே ரயில் பாதை செல்வதால் பலத்த மழை பெய்யும்போது மலையிலிருந்து பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுவது தொடா்கிறது.
இதனால், தண்டவாளம் செல்லும் வனப் பகுதியில் மலையில் இருந்து பாறைகள் உருண்டு வந்தாலும், ரயில் பாதையில் விழுவதைத் தடுக்க கம்பிவலை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.