போச்சம்பள்ளி அருகே சாலையோரக் கிணற்றில் பாய்ந்த கார்: பெரியவர்கள் மீட்பு - இரு குழந்தைகள் சாவு
பாரூர் அருகே சாலையோரம் இருந்த கல் மீது கார் மோதி கிணற்றில் விழுந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
பாரூர் அருகே சாலையோரம் இருந்த கல் மீது கார் மோதி கிணற்றில் விழுந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
தருமபுரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (33). இவர் செவ்வாய்க்கிழமை தனது உறவினர்கள் தங்கவேல் (65), பிரீதி (27), ரமா (30), ரமாவின் குழந்தைகள் வர்ஷினி (7), தக்ஷிதா (3) ஆகியோருடன் காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் அருகேயுள்ள செல்லம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். காரை ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார்.
பாரூரை அடுத்த நாகர்குட்டை எனுமிடத்தில் சென்ற போது, எதிரே வந்த மினி லாரி வேகமாக வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கல் மீது மோதி, அருகிலுள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட தங்கவேல், ராஜேந்திரன், ரமா, பிரீதி ஆகியோர் காரில் இருந்து வெளியேறி தப்பினர். சிறுமியர் வர்ஷினி, தக்ஷிதா ஆகியோரை மீட்பதற்குள் கார் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியது.
தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், பாரூர் போலீஸார் மற்றும் அப் பகுதி மக்கள் சுமார் நான்கு மணி நேரம் போராடி, தண்ணீரில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் வெளியே எடுத்தனர்.
நீரில் முழ்கியதில் வர்ஷினி உயிரிழந்தார். மூச்சுத் திணறலுடன் இருந்த சிறுமி தக்ஷிதாவை போலீஸார் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தக்ஷிதா உயிரிழந்தார்.
இதுகுறித்து பாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போச்சம்பள்ளி வருவாய் கிராமங்களுக்குள்பட்ட விவசாயக் கிணறுகளில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு திறந்த வெளியில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முன்வர வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.