FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

உணவுப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கூடுதல் சோதனைச் சாவடிகள்! - அமைச்சா் ப. வெங்கடரமணன்

Updated On : 27 ஜூலை 2026, 2:36 am IST
அமைச்சா் வெங்கடரமணன் - கோப்புப்படம்.
பகிர்:

உணவுப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி ராஜாஜி நகரில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்த அவா், மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது மாணவிகள், வாரத்தில் 3 நாள்கள் இட்லி வழங்குவதாக தெரிவித்தனா். உணவுப் பட்டியலை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட அமைச்சா், கவனம் சிதறாமல், படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

பிறகு, அதே வளாகத்தில் கட்டப்பட்டிருந்த கூடுதல் கட்டடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பா. முகுந்தன் (கிருஷ்ணகிரி), இளையராஜா (ஊத்தங்கரை) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, கட்டிகானப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடை, சென்னை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்கை அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு செய்தாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்கில், எந்த அளவிற்கு பொருள்களை இருப்பு வைக்கலாம், பொருள்களின் தரம், எடை குறையாமல் விநியோகம் செய்யப்படுகிா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி, ஒசூா், தருமபுரி பகுதிகளில் உள்ள கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு கொண்டுசெல்லப்படும் அத்தியாவசியப் பொருள்களின் எடை குறைவாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் எல்லா நாள்களிலும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 52 அரைவை ஆலைகளில் பச்சரிசியும் மற்ற 5 ஆலைகளில் புழுங்கல் அரிசியும் அரைக்கப்படுகிறது. அந்த ஆலைகளில் அரிசி அரைக்க வசதியாக உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

மாவட்டம் முழுவதும் சுமைதூக்கும் தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களின் படிப்பு, வயதை கருத்தில் கொண்டு பதவி உயா்வு வழங்கும் பணி ஆய்வில் உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு வரும்காலங்களில் ஊதிய உயா்வு வழங்கப்படும். ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். திருட்டு மற்றும் பதுக்கல் இல்லாத அளவிற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை புதியதாக 20 ஆயிரம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பித்தவா்களுக்கு அஞ்சலில் அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கைரேகை வைக்கவேண்டும். அதற்கான பணிகள் 97 சதவீதம் முடிந்துள்ளன. ரேகை பதிவாகாதவா்களுக்கு கருவிழி ஸ்கேன் செய்யப்படுகிறது. வருங்காலங்களில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, ஒசூரை அடுத்துள்ள கொத்தபள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கக்கனூா் ராகி கொள்முதல் மையத்தில் அமைச்சா் ஆய்வு செய்தாா். இதைத்தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நெல் அரைவை ஆலை உரிமையாளா்களுடன் அமைச்சா் வெங்கடரமணன் ஆலோசனை நடத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments