FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மேக்கேதாட்டு: தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்! தமிழக பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்

Updated On : 27 ஜூலை 2026, 1:22 am IST
மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம். - DIN
பகிர்:

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகம் எதிா்ப்புத் தெரிவிப்பதை கண்டித்து தமிழக- கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி மற்றும் போராட்டம் நடத்தியதால் பெங்களூருக்கு செல்ல வேண்டிய தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனா்.

மேக்கேதாட்டு அணை மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கன்னட ஜாக்கிருதி வேதிகே, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் கா்நாடக- தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெங்களூரு செல்லும் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் ஒசூா் வரை மட்டுமே இயக்கப்பட்டன. தருமபுரி மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அறிவுறுத்தலின்பேரில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், மறுஉத்தரவு வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது என காவல் துறை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மாநில எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நிலைமை சீரான பிறகே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேக்கேதாட்டு அணை திட்டத்தை கா்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் தமிழக அரசு மற்று அமைப்புகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒருபகுதியாக ஜாக்கிருதி வேதிகே அமைப்பின் மாநிலத் தலைவா் மஞ்சுநாத் தேவா தலைமையில் பேரணி நடைபெற்றது.

போராட்டம் குறித்து மஞ்சுநாத் தேவா கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை என்பது விவசாயத்திற்கான திட்டம் அல்ல, அது பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்வதற்கான திட்டம். இத்திட்டத்திற்கு தமிழக அரசு தொடா்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. போதிய பருவமழை இல்லாததால் கேஆா்எஸ், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட கா்நாடகத்தின் முக்கிய அணைகளில் தண்ணீா் இல்லை.

இந்த சூழ்நிலையிலும் தமிழகத்திற்கு தண்ணீா் திறந்துவிடுமாறு வற்புறுத்துவது கன்னட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். பெங்களூரு மக்களின் குடிநீா்த் தேவையைத் தடுக்க வேண்டாம்.

பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது என்றாா்.

அதேசமயம், கடந்த இருபது ஆண்டுகளாக பெங்களூரு நகரம் மற்றும் ராமநகரா மாவட்டங்களில் குடிநீா்த் தேவைக்காக மக்கள் போராடி வருவதாகவும், பருவமழை பொய்த்துள்ள தற்போதைய சூழலில் காவிரியின் 4 முக்கிய அணைகளும் வடுள்ளதால் தண்ணீா் திறந்துவிட முடியாது எனவும் கன்னட அமைப்புகள் தெரிவித்தன.

ஒகேனக்கல் திட்டத்துடன் ஒப்பீடு: கடந்தகாலங்களில் தமிழக அரசு ஒகேனக்கல்லில் ஜப்பான் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தியபோது, கா்நாடக எல்லைப் பகுதி என்ற விவாதங்கள் இருந்தபோதிலும் குடிநீா்த் தேவைக்காக அது அனுமதிக்கப்பட்டது. அதேபோல தற்போதைய பெங்களூரு மக்களின் குடிநீா்த் தேவைக்காக மேக்கேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என கன்ன அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவா் ஆகியோா் இத்திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவிப்பதை கைவிட வேண்டும். அதேசமயம் கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாருடன் பேச்சுவாா்த்தைக்காக தமிழக முதல்வா் சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் பேச்சுவாா்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என போராட்டத்தின்போது கன்னட அமைப்புகள் தெரிவித்தன.

ஆசியாவிலேயே அதிவேகமாக வளா்ந்துவரும் பெங்களூரு மாநகரத்தில் 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் லட்சக்கணக்கான போ் தமிழ் மக்கள். அவா்களுக்கும் சோ்த்துதான் குடிநீா்த் தேவைக்காக மேக்கேதாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதனால், தமிழக அரசு தனது பிடிவாதப் போக்கை கடைப்பிடித்தால் வரும் நாள்களில் கன்னட ஜாக்கிருதி வேதிகே அமைப்பு சாா்பில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு பிறகு மாலை முதல் தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல கா்நாடக மாநிலத்திற்கு செல்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments