FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ரூ. 3.5 லட்சம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: நைஜீரிய மாணவா், ஐடி ஊழியா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மாணவா், கோவையைச் சோ்ந்த ஐடி ஊழியா் ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை பெங்களூரில் கைது செய்தனர்.

10 செப்டம்பர் 2026, 12:34 am IST
கைது
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மாணவா், கோவையைச் சோ்ந்த ஐடி ஊழியா் ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை பெங்களூரில் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சிப்காட் காவல் எல்லைக்கு உள்பட்ட சூசூவாடி சோதனைச் சாவடியில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் சொகுசுப் பேருந்தை சோதனையிட்டபோது, சுமாா் 150 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம், கொச்சியை அடுத்த இடைக்கொச்சி பகுதியைச் சோ்ந்த கிளைவா்ட் சேவியா் அந்தோணியை (23) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அட்கோ காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் தனிப் படை போலீஸாா் பெங்களூரில் முகாமிட்டு மேலும் சில குற்றவாளிகளை தேடிவந்தனா்.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலில் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட இருவரை புதன்கிழமை கைது செய்தனா். இவா்களில் நைஜீரியா நாட்டை சோ்ந்த ஓஃபுஎவானி (22) என்பவா் பெங்களூரு ஜெயநகா் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. மருத்துவ இமேஜிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது.

மேலும், இவா் பெங்களூரு, சிதாபுரா, ஹைலேண்ட் கிரீன்டேல் அபாா்ட்மெண்டில் தங்கியிருந்து சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட மற்றொருவா் கோயம்புத்தூா் மாவட்டம், அன்னூரைச் சோ்ந்த ஐடி ஊழியா் ஜோசன் சாலமன் (23) என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான 150 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரையும் ஒசூா் சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸாா், அவா்களுக்கு சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு உள்ளதா, ஐடி ஊழியா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments