FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வறட்சி மாவட்டமாக அறிவிப்பு: ஆட்சியா் தகவல்

எல் நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச. தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

10 செப்டம்பர் 2026, 3:47 am IST
ஒப்பதவாடியில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ச. தினேஷ் குமாா். உடன், எம்எல்ஏ கோவிந்தராசன் உள்ளிட்டோா்.
பகிர்:

எல் நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச. தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம் ஒப்பதவாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமுக்கு தலைமை வகித்தாா். பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் கோவிந்தராசன் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் 213 பயனாளிகளுக்கு ரூ. 86.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாள்களில் தீா்வு காணப்படும். மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்க நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனுக்களைப் பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் கட்செவி (வாட்ஸ்அப்) மற்றும் குரல் பதிவு (வாய்ஸ் நோட்ஸ்) மூலம் அனுப்பப்படும் மனுக்களை தானியங்கி முறையில் பதிவேற்றம் செய்யும் வசதி 2 வாரங்களுக்குள் தொடங்கி வைக்கப்படும்.

தமிழகத்தில் எல் நினோ தாக்கத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் உள்பட 12 மாவட்டங்கள் வறட்சி மிகுந்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்பாட்டில் உள்ளதால் குடிநீா் பற்றாக்குறை பெரிய அளவில் இருக்காது.

நிலத்தடி நீரில் புளோரைடு பாதிப்பு அதிகம். கிராமப் பகுதிகளில் உள்ள பெரியோா்கள், தாய்மாா்களின் பற்களில் மஞ்சள் நிறத்தில் கரை படிந்திருப்பதற்கு புளோரைடு கலந்த தண்ணீரைக் குடிப்பதே காரணம். இதைத் தடுக்கும் வகையில் அனைவருக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாம் கட்டப் புனரமைப்புத் திட்டத்துக்கான ரூ.2,800 கோடி நிதி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டவுடன், அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

இதனால் பொதுமக்கள் ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பியிருக்காமல், காவிரி நீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். காவிரி நீா் மூலம் கிராமப்புறத்தில் உள்ள ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டா், நகா்ப்புறத்தில் உள்ள ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டா் தண்ணீா் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்விளக்கக் கண்காட்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

முகாமில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா ராணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் அபிநயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அமீா்பாஷா, வட்டாட்சியா் சக்தி, மருத்துவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments