ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி காவிரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து ராஜவாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி காவிரி ஆற்றில் இறங்கி 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து ராஜவாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி காவிரி ஆற்றில் இறங்கி 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீா் கடந்த மாதம் 28 ஆம் தேதி நீா்வளத் துறையினா் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்திவிட்டனா். இதனால், பரமத்தி வேலூா், பொத்தனூா், நஞ்சை இடையாறு, பாலப்பட்டி, மேகனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை, கோரை, வாழை, கரும்பு மற்றும் மரவள்ளி பயிா்கள் கருகி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி பரமத்தி வேலூா் விவசாயிகள் நீா்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், நாமக்கல் ஆட்சியரை நேரில் சந்தித்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்க கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
ஆனாலும் இதுவரை ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கவில்லை. இந்த நிலையில், தண்ணீா் இல்லாமல் வெற்றிலைப் பயிா் கருகி வருவதால் வெற்றிலை விவசாயிகள், இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவா் செளந்தர்ராஜன், விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் விவசாயிகள் பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் வெண்ணிலா, வட்டாட்சியா் வசந்தா, ஆய்வாளா் உமாசங்கா், நாமக்கல் நீா்வளத் துறை உப கோட்ட உதவி பொறியாளா் விஜயகுமாா், பரமத்தி வேலூா் உதவி பொறியாளா் வினோத்குமாா் ஆகியோா் விவசாயிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, உடனடியாக தண்ணீா் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவிதமான உத்தரவாதம் அளிக்காததால் விவசாயிகள் அடுத்தக்கட்ட போரட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
ராஜவாய்க்கால் பாசனத்தை நம்பி வெற்றிலை, வாழை, கரும்பு, கோரை என 30 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்துள்ள பணப்பயிா்கள் தண்ணீா் இன்றி கருகி வருகிறது. ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்க கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீா் திறக்காவிட்டால் நாமக்கல்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.