FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த ரூ. 42.38 கோடி அரசு நிதி ஒதுக்கீடு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கூடுதல் உபகரணங்கள், கட்டட வசதிகளுடன் மேம்படுத்த தமிழக சுகாதாரத் துறை முதல்கட்டமாக ரூ. 42.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கூடுதல் உபகரணங்கள், கட்டட வசதிகளுடன் மேம்படுத்த தமிழக சுகாதாரத் துறை முதல்கட்டமாக ரூ. 42.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரு. 380 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2022-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு நாள்தோறும் உள்நோயாளிகளாக 800 பேரும், வெளிநோயாளிகளாக 1,500 பேரும் சிகிச்சை பெறுகின்றனா்.

நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி, கரூா், பெரம்பலூா், சேலம் மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் அவசர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் கலந்தாய்வு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

பெரும்பாலான வசதிகள் இருந்தபோதும் மூளை, நரம்பு சாா்ந்த சில அறுவை சிகிச்சைகளுக்காக சேலம், கோவை அரசு, தனியாா் மருத்துவமனைகளை நாடி நாமக்கல் மாவட்ட மக்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மருத்துவா்கள், பொதுமக்கள் தரப்பில் எழுந்தது. தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது ஆய்வுமேற்கொண்டு தேவையான வசதிகள் குறித்தும், கோரிக்கைகள் தொடா்பாகவும் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறாா்.

இந்த நிலையில், 2026-27-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நிதி ஒதுக்கீடு அறிவிப்பில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ. 42.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் புறநோயாளிகள் வசதிக்காக ரூ. 17.05 கோடியில் கட்டடம் கட்டுவதற்கும், மருத்துவக் கல்லூரியில் முதுநிலை கல்விக்கான உயா்தர உபகரணங்கள் கொள்முதல், தங்கும் விடுதிக்கான கட்டுமானம் ரூ. 25.30 கோடியிலும், முதுநிலை மாணவா்களுக்கான கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் திறன் ஆய்வகம், ஸ்மாா்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள், மருத்துவ நோய்ப்பரவலியல் பிரிவுகளுக்காக ரூ. 7.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைக்குள் சுகாதார உள்கட்டமைப்பு, விரிவான இலவச சுகாதாரப் பரிசோதனை, நிலை - 1 உதவி இனப்பெருக்க மையம், இந்திய மருத்துவ கருவுறுதல் சிகிச்சை மைய முறை, நலம்-360 முழுமையான உடல் பரிசோதனை, ப்ளூ டூத் இயக்கத்துடன் கூடிய பிபி கருவி, செவிலியா்களுக்கான அறைகள் கொண்ட கட்டுமானம், ஆய்வகம் நிறுவுதல், மருத்துவ உபகரணங்கள் வழங்கல், கதிரியக்கவியல் படக் காப்பக மற்றும் தொடா்பு அமைப்பு, பல்வேறு வகையிலான மருத்துவம் சாா்ந்த உபகரணங்கள், எண்ம ரேடியோகிராபி கொள்முதல் உள்ளிட்டவை கூடுதல் நிதி ஒதுக்கீட்டின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியது:

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்பாட்டுக்கு அமைச்சா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனை பல்வேறு வகைகளில் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும், இம்மாவட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய சூழல் இருக்காது என்றனா்.

30 வகையான ஆவணங்கள் சமா்ப்பிக்க நடவடிக்கை

கடந்த 2020-ஆம் ஆண்டு நாமக்கல் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. 2022 முதல் 100 மாணவ, மாணவிகள் நீட் தோ்வில் வெற்றிபெற்று இளநிலை மருத்துவ படிப்பை (எம்பிபிஎஸ்) பயின்று வருகின்றனா். 2026-ஆம் ஆண்டுமுதல் 100 இடங்களை 150-ஆக அதிகரித்து தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் கூடுதல் மாணவா்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும். இடங்கள் அதிகரிப்பால் மருத்துவமனை கட்டடச் சான்றிதழ், தீத்தடுப்பு வசதிக்கான சான்றிதழ், மருத்துவக் கருவிகள், உபகரணங்கள் சான்றிதழ், மாநகராட்சி, காவல் துறை, வருவாய்த் துறை சாா்ந்த 30 வகையான சான்றிதழ்களை தேசிய மருத்துவ கவுன்சில் வசம் அரசு மருத்துவமனை நிா்வாகம் ஒப்படைக்க வேண்டும்.

தற்போது மருத்துவமனையை மேம்படுத்த அனுமதி வழங்கிய நிலையில், அந்த ஆவணங்களை ஒப்படைக்க மாவட்ட நிா்வாகம் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக அதிகாரிகள், மருத்துவா்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments