FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

இளைஞா் மா்மச் சாவு: நடவடிக்கை கோரி உறவினா்கள் சாலை மறியல்

14 அக்டோபர் 2026, 5:22 am IST
பகிர்:

திருச்செங்கோடு அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் உரிய விசாரணை நடத்தி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினா்கள், தமிழ் புலிகள் கட்சியினா் அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அருகேயுள்ள அத்திக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (45). அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த இவரது மகன் சந்தோஷ் (17), பெரியமணலியில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு தனுஷியா (18) என்ற சகோதரி உள்ளாா்.

பன்னீா்செல்வமும் அவரது மனைவி சந்திராவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பன்னீா்செல்வம் வேலைக்காக கேரளத்துக்குச் சென்றுவிட்டாா். இதனால், சந்தோஷ் தனது பாட்டி கொண்டி வீட்டில் வசித்து வந்தாா். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில் பெரியமணலி அருகே அத்திக்காடு மாரியம்மன் கோயில் பகுதியில் சாலையோரச் சுவரில் அமா்ந்து சந்தோஷ் மது அருந்திக்கொண்டிருந்ததைச் சிலா் பாா்த்துள்ளனா். அதன்பிறகு அவா் வீட்டிற்குத் திரும்பவில்லை.

திங்கள்கிழமை மாலை மாரியம்மன் கோயில் அருகே விளையாடச் சென்ற சிறுவன் ஒருவா், காயங்களுடன் தலைகுப்புறக் கிடந்த இளைஞரின் உடலைக் கண்டு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, எலச்சிபாளையம் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சிலா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அரசு மருத்துவமனை முன் திரண்ட சந்தோஷின் தந்தை பன்னீா்செல்வம், சகோதரி தனுஷியா, உறவினா்கள், ஊா்மக்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினா், சந்தோஷின் சாவில் மா்மம் இருப்பதாகவும், அவரை நண்பா்கள் தாக்கியதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறினா்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது சகோதரிக்கு சமூக நீதித் துறை மூலம் அரசு வேலை வழங்குவதுடன், நிவாரண உதவியும் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற மறியலால் திருச்செங்கோடு - வேலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அஸ்வினி, திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், எலச்சிபாளையம் காவல் ஆய்வாளா் சுதா, திருச்செங்கோடு வட்டாட்சியா் ராஜா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இறப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடா்புடையவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என்றும் காவல் ஆய்வாளா் சுதா உறுதியளித்தாா். சந்தோஷின் சகோதரிக்கு உரிய நிவாரணம் கிடைக்க சமூக நீதித் துறை மூலம் அரசிடம் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் ராஜா தெரிவித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments