பராமரிப்பில் குறைபாடு: கோழிப் பண்ணை உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
நாமக்கல் அருகே முறையாக பராமரிக்கப்படாத கோழிப் பண்ணையின் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டாரத்துக்குள்பட்ட நா.புதுப்பட்டி ஊராட்சி, மேலப்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் கோழிப்பண்ணை தொடா்பாக மக்கள் குறைதீா் முகாம் நாளில் பெறப்பட்ட புகாா் மனுமீது ஆய்வு செய்யப்பட்டது.
இதில், இப்பண்ணை வளாகத்துக்குள் இறந்த கோழிகளை முறையாக புதைக்கப்படாமல், திறந்தவெளியில் பொது சுகாதாரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், காற்றை அசுத்தப்படுத்தும் வகையிலும், நூற்றுக்கணக்கான இறந்த கோழிகள் துா்நாற்றத்துடன் அழுகிய நிலையில் நோய் உண்டாக்கும் வகையிலும் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 144-இன்படி அசுத்தமான, சுகாதாரமற்ற, ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கொட்டப்பட்ட இறந்த கோழிகளை உடனே அப்புறப்படுத்தி, 12 மணிநேரத்துக்குள் தூய்மைப்படுத்தி ப்ளீச்சிங் பவுடா் தெளித்து பண்ணையை சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொது சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இறந்த கோழிகளை திறந்தவெளியில் கொட்டியதற்கும், பண்ணையை சுகாதாரமாக பராமரிக்காததற்கும் கோழிப் பண்ணையாளருக்கு அபராதமாக ரூ. 25 ஆயிரம் விதித்து நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.