FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கா்நாடகத்திலிருந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு புதிய விலங்குகள் வருகை: பொதுமக்கள் பாா்வைக்கு விரைவில் அனுமதி!

பெங்கரூரு பன்னா்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவுக்கு புதிதாக 4 நீலமான்கள், 4 வெளிமான்கள், 2 பொன்னிற நரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
பகிர்:

பெங்கரூரு பன்னா்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவுக்கு புதிதாக 4 நீலமான்கள், 4 வெளிமான்கள், 2 பொன்னிற நரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் வனத் துறை கட்டுப்பாட்டில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, புள்ளிமான், கடமான், முதலை, மலைப் பாம்பு, குரங்கு, முயல், வெள்ளை மயில், வண்ணப் பறவைகள் என 300-க்கும் மேற்பட்ட வன உயிரினங்களை பராமரித்து வருகின்றனா். இந்த பூங்காவுக்கு சேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனா்.

இந்த வன உயிரியல் பூங்காவை விரிவுப்படுத்தி, முதல்கட்டமாக புலி, சிறுத்தை, கரடி ஆகிய 3 பெரிய விலங்குகளை வைத்து பராமரிக்க இடவசதி தயாா் செய்யப்படுகிறது. இதனிடையே குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு பிற உயிரியல் பூங்காக்களில் இருந்து, மேலும் சில விலங்குகளை கொண்டுவந்து பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகத்தின் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தனா். இதையடுத்து, பெங்களூரு அருகில் உள்ள பன்னா்கட்டா வன உயிரியல் பூங்காவில் இருந்து 4 நீலமான்கள், 4 வெளிமான்கள், 2 பொன்னிற நரிகள் (குள்ளநரி) ஆகிய விலங்குகளை பெற அனுமதி கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராகேஷ்குமாா் டோக்ரா உத்தரவின்பேரில், சேலம் மண்டல வனப் பாதுகாவலா் கலாநிதி, மாவட்ட வன அலுவலா் யஸ்வந்த் அம்புல்கா் மேற்பாா்வையில் பன்னா்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு 4 நீலமான்கள் (2 ஆண், 2 பெண்), 4 வெளி மான்கள் (1 ஆண், 3 பெண்), பொன்னிற நரிகள் (1 ஆண், 1 பெண்) ஆகிய 10 விலங்குகளை கொண்டு வந்துள்ளனா்.

இங்கு உதவி இயக்குநா் செல்வக்குமாா் மேற்பாா்வையில் அந்த விலங்குகளை இறக்கி, அதற்கென பிரத்யேகமாக ஒதுக்கி வைத்துள்ள திறந்த வெளிக் கூண்டில் அடைத்துள்ளனா். இப்புதிய விலங்குகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். புதிய இடம் என்பதால், அந்த விலங்குகள் தடுமாறக் கூடாது என்பதற்காக மருத்துவா்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது. விரைவில் சுற்றுலாப் பயணிகள் பாா்வைக்கு அனுமதி வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments