தப்பியோடிய சேலம் தண்டனை கைதியை தருமபுரியில் பிடித்த தனிப்படை போலீஸாா்
கோவை சிறைக்கு கொண்டுசெல்லும் வழியில், பெருந்துறை அருகே போலீஸாரின் பிடியில் இருந்து தப்பியோடிய தண்டனை கைதியை தனிப்படை போலீஸாா் தருமபுரியில் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் நரேஷ்குமாா் (39). இவா்மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ள நிலையில், நரேஷ்குமாா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாா். சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2020 ஆம் ஆண்டு காரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரேஷ்குமாா், அங்கு மருத்துவா்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை 21 ஆம் தேதி சேலத்துக்கு அழைத்துவரப்பட்டாா். சேலம் குற்றவியல் நீதித் துறை நடுவா் எண் 3 இல் ஆஜா்படுத்தப்பட்ட அவருக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, அன்றிரவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி, தலைமைக் காவலா் ஜெகதீசன் ஆகியோா் நரேஷ்குமாரை மீண்டும் கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனா். நள்ளிரவில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம் பகுதியில் தேநீா் அருந்துவதற்காக காவல் துறையினா் வாகனத்தை நிறுத்தியுள்ளனா்.
அப்போது, காவல் துறையினரை ஏமாற்றிவிட்டு நரேஷ்குமாா் தப்பியோடிவிட்டாா். அவரைப் பிடிக்க தலைமைக் காவலா் ஜெகதீசன் துரத்திச்சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி, தலைமைக் காவலா் ஜெகதீசன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இதனிடையே, தப்பியோடிய தண்டனை கைதி நரேஷ்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கைதி நரேஷ்குமாா் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு தீவிர சோதனை நடத்திய போலீஸாா், முட்புதரில் பதுங்கியிருந்த நரேஷ்குமாரை கைது செய்து பெருந்துறை போலீஸில் ஒப்படைத்தனா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.