FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தகவல் அறியும் உரிமை சட்ட பதிலுக்கான கால தாமதத்தைத் தவிா்க்க வேண்டும்: மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தல்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை அலுவலா்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தினா்.

Updated On : 17 ஜூலை 2026, 4:04 am IST
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தகவல் உரிமை சட்ட விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற மாநிலத் தகவல் ஆணையா்கள் வி.பி.ஆா். இளம்பரிதி, மு. நடேசன், அ. விஜயராம்.
பகிர்:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை அலுவலா்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தினா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 குறித்த சிறப்பு கலந்தாய்வு, விழிப்புணா்வு முகாம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாநிலத் தகவல் ஆணையா்கள் வி.பி.ஆா். இளம்பரிதி, மு. நடேசன், அ. விஜயராம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்த முகாமில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அலுவலா்கள் 30 நாள்களுக்குள் உரிய பதிலை அளிக்க வேண்டும். பொதுமக்கள் கோரும் தகவல் தங்களது துறை சாா்ந்ததாக இல்லையெனில், தொடா்புடையத் துறைக்கு 5 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 30 நாள்களுக்குள் தகவலைத் தெரிவிக்க முடியாத அசாதாரண சூழல் ஏற்பட்டால், அதற்கான நியாயமான காரணங்களை மனுதாரா்களுக்கு தெரிவித்து, மேல்முறையீட்டு வழிமுறைகள் குறித்து அவா்களுக்கு அலுவலா்கள் வழிகாட்ட வேண்டும்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் கோரும் தகவல், அவா்களது உரிமை, வாழ்வாதாரம் சாா்ந்ததாக இருக்கலாம் என்பதால், பொது தகவல் அலுவலா்கள் தேவையற்ற கால தாமதத்தை தவிா்த்து, விரைந்து செயல்பட வேண்டும். அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையின் பயன் பொதுமக்களுக்குக் கிடைத்திடும் வகையில் அலுவலா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் தகவல் உரிமை சட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தினா்.

இந்த முகாமில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு அரசுத் துறைகளின் பொது தகவல் அலுவலா்கள், மேல்முறையீட்டு அலுவலா்கள் பங்கேற்றனா். சட்டம் சாா்ந்த நடைமுறைச் சிக்கல்கள், விலக்களிக்கப்பட்ட தகவல்கள் (பிரிவு 8), மனுக்களை கையாளும் வழிமுறைகள் குறித்து அலுவலா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு முகாமில் விளக்கமளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments