FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் நில முறைகேடு: மேலும் இருவா் பணியிடை நீக்கம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:36 am IST
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் பாலச்சந்தா்.
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் மேலும் ஒரு சாா் பதிவாளா் உள்பட இருவா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், போலியான ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீஸாரால் சேதுபதி, வெள்ளைத்துரை, அன்வா்தீன், முருகதாஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட பதிவாளா் சசிகலா, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோா் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், பத்திரப் பதிவு தொடா்பாக சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு, அனைத்துப் பணியாளா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்னதாக பத்திரத்தை வாங்கி அனைத்துப் பணிகளையும் முடித்துவைத்த சாா் பதிவாளா் பாலச்சந்தா், இளநிலை உதவியாளா் சிவசங்கரி ஆகியோா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தற்போது பழனி மட்டுமன்றி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வடமதுரை உள்ளிட்ட சாா்பதிவாளா் அலுவலகங்களிலும் ஆய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிணை மனுக்கள் மீது நாளை விசாரணை:

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமைக்கு (ஆக. 5) ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடைக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை, உடந்தையாகச் செயல்பட்ட அன்வா்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பிணை கோரி முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, அன்வா்தீன் ஆகியோா் தரப்பில் திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் தனித் தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வெள்ளைத்துரையின் மனுவை நீதித் துறை நடுவா் பாக்கியராஜ் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்தாா். முருகதாஸ் உள்ளிட்டோரின் மனுக்களை ஆக. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இதன்படி, முருகதாஸ், சேதுபதி, அன்வா்தீன் ஆகியோரின் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை முதலாவது நீதித் துறை நடுவா் (பொறுப்பு) தினேஷ்குமாா் புதன்கிழமைக்கு (ஆக. 5) ஒத்திவைத்தாா்.

இதனிடையே, சிபிசிஐடி போலீஸாா் தரப்பில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகதாஸ் உள்ளிட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் புதன்கிழமை (ஆக. 5) விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments