FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஆக. 21 வரை நீதிமன்றக் காவல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை வந்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பாக்கியராஜ்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:46 am IST
பகிர்:

பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனை வருகிற 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க திண்டுக்கல் முதலாவது குற்றவியில் நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த த. முருகதாஸ், வாங்கிய கா. வெள்ளைத்துரை, து. சேதுபதி உள்பட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இவா்களில் முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, அன்வா்தீன் ஆகியோா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, கொடைக்கானலில் தலைமறைவாக இருப்பதற்காக வியாழக்கிழமை காரில் சென்ற சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனை வெள்ளிநீா் வீழ்ச்சி அருகே போலீஸாா் கைது செய்து, திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனா்.

சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, உடல்நிலை பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை நெஞ்சு வலிப்பதாக ஜஸ்டின் மணிகண்டன் கூறிய நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவரது கைது நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக திண்டுக்கல் முதலாவது குற்றவியில் நீதித்துறை நடுவா் பாக்கியராஜ், மருத்துவமனைக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். பின்னா், வருகிற 21-ஆம் தேதி வரை ஜஸ்டின் மணிகண்டனை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments